சிவில் என்ஜினீயர் வீட்டில் ரூ.1¼ கோடி தங்க, வைர நகைகள் திருடிய 3 பேர் கைது; 24 மணிநேரத்தில் போலீசார் அதிரடி..!!!


சிவில் என்ஜினீயர் வீட்டில் ரூ.1¼ கோடி தங்க, வைர நகைகள் திருடிய 3 பேர் கைது; 24 மணிநேரத்தில் போலீசார் அதிரடி..!!!
x
தினத்தந்தி 29 April 2022 2:07 AM IST (Updated: 29 April 2022 2:07 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் சிவில் என்ஜினீயர் வீட்டில் திருடிய பீகாரை சேர்ந்த 3 பேர் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1¼ கோடி தங்க, வைர நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

என்ஜினீயர் வீட்டில் திருட்டு

  பெங்களூரு உளிமாவு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அரகெரே கிராஸ், பி.ஜி. ரோட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பின் 7-வது மாடியில் தஜமுல்லா பாஷா (வயது 62) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், சிவில் என்ஜினீயர் ஆவார். கடந்த 24-ந் தேதி இரவு தனது வீட்டை பூட்டி விட்டு தஜமுல்லா பாஷா குடும்பத்துடன் வெளியூருக்கு புறப்பட்டு சென்றிருந்தார்.

  இந்த சந்தா்ப்பத்தில் தஜமுல்லா பாஷாவின் பால்கனி கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபர்கள், பீரோவில் இருந்த தங்க நகைகள், வைர நகைகள், பணம், வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டார்கள். நேற்று முன்தினம் அதிகாலையில் ஊரில் இருந்து தஜமுல்லா பாஷா வீட்டுக்கு திரும்பினார். அப்போது பால்கனி கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த நகை, பணம் திருட்டுப்போய் இருப்பதை பார்த்து அவர் அதிா்ச்சி அடைந்தார்.

3 தனிப்படைகள் அமைப்பு

  இதுபற்றி உளிமாவு போலீஸ் நிலையத்தில் தஜமுல்லா பாஷா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து, மர்மநபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

  அதன்படி, தனிப்படை போலீசார், திருட்டு கும்பலை பிடிக்க தீவிரம் காட்டினார்கள். அப்போது மர்மநபர்கள், பெங்களூருவில் இருந்து கோலாருக்கு பஸ்சில் சென்றிருப்பது தெரியவந்தது.

பீகாரை சேர்ந்தவர்கள் கைது

  அத்துடன் கோலாரில் இருந்து ரெயிலில் செல்ல இருப்பது பற்றியும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார், கோலார் மாவட்டம் பங்காருப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வைத்து திருட்டு கும்பலை சேர்ந்த 3 பேரையும் கைது செய்தார்கள். அவர்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

  அப்போது பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்லு (வயது 34), போலா என்ற பாஸ்வான் (36), ஸ்ரீதர் (58) என்று தெரிந்தது. இவர்கள் பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். தஜமுல்லா பாஷா தனது குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றிருப்பதை அறிந்த 3 நபர்களும், பால்கனி கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

ரூ.1¼ கோடி மதிப்பு

  இந்த வழக்கில் போலீசார் துரிதமாக செயல்பட்டு புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் திருட்டு கும்பலை கைது செய்திருந்தனர். கைதான 3 பேரிடம் இருந்து தஜமுல்லா பாஷா வீட்டில் திருடிய தங்க நகைகள், வைர நகைகள், பிளாட்டினம், வெள்ளி பொருட்கள், வெளிநாட்டு பணம் உள்பட ரூ.1¼ கோடி மதிப்பிலான பொருட்களை மீட்டு இருந்தார்கள்.

Next Story