ஆட்டை அடித்துக்கொன்று மரத்தில் தொங்க விட்ட சிறுத்தை
கடையம் அருகே ஆட்டை அடித்துக்கொன்ற சிறுத்தை மரத்தில் தொங்கவிட்டு சென்றது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது மலையடிவாரத்தில் உள்ள கிராமத்திற்குள் புகுந்து கால்நடைகளை தூக்கிச்சென்றும், பயிர்களை சேதப்படுத்தியும் அட்டகாசத்தில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் கடையம் அருகே கடனாநதி அடிவார பகுதியில் உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் பட்டு. விவசாயியான இவர் ஆடுகளையும் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பினார். அப்போது ஒரு ஆடு மட்டும் காணாமல் போனது. பல்வேறு இடங்களில் தேடியும் ஆடு கிடைக்கவில்லை. நேற்று காலையில் மலை அடிவார பகுதியில் பட்டு தேடிப்பார்த்த போது, அங்குள்ள ஒரு மரத்தில் அவரது ஆடு இறந்த நிலையில் தொங்கிக் கொண்டு இருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பயிற்சி உதவி வனப்பாதுகாவலர் ராதை உத்தரவின்படி, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். அப்போது, வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று பட்டு மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற ஆட்டை அடித்துக் கொன்றுவிட்டு, மரத்தில் வைத்து ஆட்டின் இறைச்சியை தின்று கொண்டு இருந்துள்ளது. அந்த சமயத்தில் அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்ததால், ஆட்டை மரத்திலேயே தொங்கவிட்டபடி ேபாட்டு விட்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி ஆய்வு செய்து, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story