3 ஆண்டுகள் கொத்தடிமையாக வைத்து பாலியல் தொல்லை; கலெக்டரிடம், இளம்பெண் புகார் மனு


3 ஆண்டுகள் கொத்தடிமையாக வைத்து பாலியல் தொல்லை; கலெக்டரிடம், இளம்பெண் புகார் மனு
x
தினத்தந்தி 29 April 2022 3:12 AM IST (Updated: 29 April 2022 3:12 AM IST)
t-max-icont-min-icon

3 ஆண்டுகள் கொத்தடிமையாக வைத்து பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் இளம்பெண் ஒருவர் புகார் மனு கொடுத்தார்.

ஈரோடு
3 ஆண்டுகள் கொத்தடிமையாக வைத்து பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் இளம்பெண் ஒருவர் புகார் மனு கொடுத்தார்.
இளம்பெண்
தஞ்சாவூர் மாவட்டம் பெரும்பாண்டி பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
தஞ்சாவூர் மாவட்டம் தேவனாஞ்சேரியை சேர்ந்த ஒருவர், எனது குடும்ப வறுமை காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முருங்கதொழுவு பகுதியில் உள்ள ஒரு துணி நூல் பட்டறையில் வேலைக்கு சேர்த்து விட்டார். என்னுடன் எங்கள் பகுதியைச் சேர்ந்த 5 வளர் இளம் பெண்களும் வேலைக்கு சேர்ந்தனர். மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம் பேசி வேலைக்கு சேர்க்கப்பட்ட நிலையில், பட்டறை உரிமையாளர்கள் இதுவரை எனக்கோ, எனது பெற்றோரிடமோ ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. மேலும், வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே பட்டறை உரிமையாளர்கள் எனக்கு சரியாக உணவு கொடுக்காமலும், ஓய்வின்றி தொடர்ந்து வேலை செய்யுமாறும் நெருக்கடி கொடுத்தனர்.
இதற்கிடையில் கடந்த 2021-ம் ஆண்டு, உடல்நலக்குறைவுடன் நான் வேலை செய்து கொண்டிருந்தபோது எந்திரத்தில் எனது வலது கை சிக்கி முழுவதுமாக சிதைந்துவிட்டது. உடனடியாக என்னை சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து, கை முழுவதும் பிளேட்டுகள் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பாலியல் தொந்தரவு
அப்போது கூட என் பெற்றோரையோ, உறவினர்களையோ என்னை பார்க்க பட்டறை உரிமையாளர்கள் அனுமதிக்கவில்லை. ஒரு வாரம் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கை முழுவதும் குணமடையும் முன்பாகவே அவர்கள் வீட்டுக்கு அழைத்துச்சென்று வீட்டு வேலை செய்ய சொன்னார்கள். தற்போது வரை எனது வலது கை முழுமையாக செயல்படாது.
இந்த நிலையில் பட்டறை உரிமையாளரின் தந்தை, என்னை பலாத்காரம் செய்து, தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். அதுகுறித்து பட்டறை உரிமையாளரிடம் கூறியபோது அவர், இதை வெளியில் சொன்னால் உன்னை கொன்றுவிடுவோம் என அடித்து மிரட்டினார்.
கொலை செய்ய திட்டம்
இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல், நான் வீட்டுக்கு செல்வதாக கூறினேன். இதனால் கடந்த 24-ந்தேதி பட்டறை உரிமையாளர்கள் என்னை அடித்து சித்ரவதை செய்தனர். மேலும் அவர்கள் எனது தொடையில் சூடு வைத்தனர். என்னை விட்டுவிடுங்கள் என நான் கெஞ்சியும் அவர்கள் விடவில்லை. மேலும், என்னை வெளியில் விட்டால் உண்மையை சொல்லிவிடுவாள் என நினைத்து அவர்கள் என்னை கொலை செய்ய திட்டமிட்டனர். அதற்காக அவர்கள் 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி வந்து அறையில் வைத்தனர்.
இதைத்கண்டு அதிர்ச்சி அடைந்த நான் உயிரைக்காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தப்பி ஓடி வந்துவிட்டேன். இதைத்தொடர்ந்து இதுகுறித்து சிவகிரி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் கூறி உதவி கேட்டேன். அவர் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தார். அதன் பின்னர் அவர் என்னை இங்கு அழைத்து வந்து மனு கொடுக்க செய்தார். எனவே, எனக்கு சம்பளம் எதுவும் கொடுக்காமல் 3 ஆண்டுகளாக கொத்தடிமையாக நடத்தி வேலை வாங்கிய பட்டறை உரிமையாளர்கள் மீதும், என்னை பாலியல் துன்புறுத்தல் செய்த பட்டறை உரிமையாளரின் தந்தை மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

Next Story