ஈரோட்டில் பரபரப்பு சம்பவம் பழிக்கு பழிவாங்க அரிவாளுடன் வாலிபரை துரத்திய 2 பேர் கைது; 4 பேருக்கு வலைவீச்சு
ஈரோட்டில், பழிக்கு பழிவாங்க அரிவாளுடன் வாலிபரை துரத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு
ஈரோட்டில், பழிக்கு பழிவாங்க அரிவாளுடன் வாலிபரை துரத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வாலிபர் கொலை
ஈரோடு சென்னிமலை ரோடு பெரியதோட்டம் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் தக்காளி விக்கி என்கிற விக்னேஷ்வரன் (வயது 27). இவர், கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த வழக்கில் அடிக்கடி சிறைக்கு சென்று வந்துள்ளார். மேலும், விக்னேஷ்வரனின் நண்பரான சென்னிமலை ரோடு லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த மதன் (30) மற்றும் 12 பேருடன் சேர்ந்து, கடந்த 2020-ம் ஆண்டு சூரம்பட்டி வலசு அணைக்கட்டு ரோடு பகுதியை சேர்ந்த புறா சரவணன் என்கிற சரவணனை (30) கொலை செய்ய திட்டமிட்டு, ஈரோடு கே.ஏ.எஸ். நகரில் காலிங்கராயன் வாய்க்கால் கரையோரம் உள்ள வயல்வெளியில் காத்திருந்தனர்.
அப்போது, சரவணன் அவரது நண்பர்களான சூரம்பட்டியை சேர்ந்த நாகராஜ் (25), கணேசன் (24) ஆகியோருடன் ஸ்கூட்டரில் வந்துள்ளார். மதன், விக்னேஷ்வரனின் திட்டத்தை அறிந்த சரவணன், கணேசன் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். நாகராஜ் மட்டும் அந்த கும்பலிடம் சிக்கி கொண்டார். இதைத்தொடர்ந்து அவர்கள், நாகராஜை அரிவாள் மற்றும் கற்களால் தாக்கி கொடூரமாக கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் மதன், விக்னேஷ்வரன் உட்பட 12 பேரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
2 பேர் கைது
இதற்கிடையில் அந்த கொலை வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த விக்னேஷ்வரனை கடந்த மாதம் கஞ்சா விற்பனை செய்ததாக ஈரோடு சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர். கோர்ட்டு உத்தரவுப்படி விக்னேஷ்வரன் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார். அதன்படி கடந்த 24-ந்தேதி போலீஸ் நிலையம் வந்து கையெழுத்திட்டு சென்ற விக்னேஷ்வரனை, நாகராஜ் கொலைக்கு பழிவாங்குவதற்காக புறா சரவணன் என்கிற சரவணன் தலைமையிலான 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளுடன் துரத்தியுள்ளனர். அந்த கும்பலிடம் இருந்து விக்னேஷ்வரன் தப்பி ஓடினார்.
இதுதொடர்பாக சூரம்பட்டி போலீசில் விக்னேஷ்வரன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சூரம்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்கிற குண்டு ராமச்சந்திரன் (35), சவுந்தர்ராஜன் (34) ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சரவணன் உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பழிக்குப்பழிவாங்க அரிவாளுடன் வாலிபரை ஓட ஓட விரட்டிய சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story