ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டி; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்


ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டி; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 April 2022 3:24 AM IST (Updated: 29 April 2022 3:24 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

ஈரோடு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈரோடு மாவட்ட பிரிவு சார்பில், மாற்றுத்திறனாளிகள், கண் பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் காது கேளாதோருக்கான குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டி ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
இதில் குழு விளையாட்டு போட்டிகளான இறகு பந்து, மேஜை பந்து, கையுந்து பந்து, எறிபந்து மற்றும் கபடி ஆகிய போட்டிகள் நடைபெற்றது. மேலும் கை, கால் ஊனமுற்றோருக்கான தடகள போட்டிகளில் கால் ஊனமுற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டமும், கை ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டமும், குள்ளமானோருக்கு 50 மீட்டர் ஓட்டமும், கால் ஊனமுற்றோருக்கு குண்டு எறிதல் போட்டியும், முற்றிலும் பார்வையற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டமும், மிக குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டமும், நின்ற நிலை தாண்டுதல் மற்றும் மெது பந்து போட்டியும், முற்றிலும் பார்வையற்றோருக்கு குண்டு எறிதல் போட்டியும் நடைபெற்றது.
இதேபோல் மன நிலை பாதிக்கப்பட்டு ஐ க்யூ தன்மை முற்றிலும் இல்லாதவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டமும், மெது பந்து எறிதல் போட்டியும், நின்ற நிலையில் தாண்டுதல் போட்டியும், ஐ க்யூ தன்மை நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டமும், குண்டு எறிதல் போட்டியும் நடைபெற்றது.
இந்த போட்டியில் மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கூடங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஸ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி கோதைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story