‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பை அப்புறப்படுத்தப்படுமா?
ஈரோடு, பழையபாளையம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் பின்புறம் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
வேகத்தடை அமைக்க வேண்டும்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. பெருந்துறை ரோடு மற்றும் மீனாட்சி சுந்தரனார் ரோடு ஆகிய சாலைகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் மேம்பாலம் ஏறி அரசு ஆஸ்பத்திரி முன்பு இறங்குகின்றனர். வாகனங்கள் வேகமாக வருவதால் பாவாடை வீதியில் இருந்து வரும் மாணவ -மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஈ.வி.என்.ரோட்டை கடக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதே நேரத்தில் ஈ.வி.என்.ரோட்டில் இருந்து ரெயில்நிலையம் மற்றும் சென்னிமலை ரோட்டிற்கு செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகிறார்கள். எனவே அரசு ஆஸ்பத்திரி முன்பு மேம்பாலம் முடியும் இடத்தில் வேகத்தடை அமைத்தால் மிகவும் பயன்உள்ளதாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மெனிஷா, ஈரோடு.
சாக்கடை வடிகால் வசதி
அந்தியூரை அடுத்த ஒட்டபாளையம் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையத்தில் சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தெருவில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக பொதுமக்களால் நடந்து செல்ல முடியவில்லை. துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே செம்புளிச்சாம்பாளையத்தில் சாக்கடை வடிகால் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், செம்புளிச்சாம்பாளையம்.
கம்பிகள் அகற்றப்படுமா?
அந்தியூர் பஸ் நிலையம் அருகே பவானி செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆபத்தான முறையில் சில கடைகளின் முன்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதியும், வாகன ஓட்டிகள் நலன் கருதியும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கம்பிகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அந்தியூர்.
பாலம் சீரமைப்பு
கோபியில் இருந்து தெப்பக்குளம் வழியாக பஸ் நிலையத்துக்கு செல்ல ரோடு ஒன்று உள்ளது. அந்த ரோட்டில் உள்ள பாலம் பழுதடைந்து காணப்பட்டது. இதுபற்றிய செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து பழுதடைந்த பாலம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைக்கப்பட்டு வெள்ளை அடிக்கப்பட்டது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்துக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
பொதுமக்கள், கோபி.
பாராட்டு
கோபி டவுன் ஈஸ்வரன் கோவில் வீதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டது. குழாய் பதிக்கப்பட்ட பிறகு தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படவில்லை. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கி வந்தன. இதுபற்றிய செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து சரியாக மூடப்படாத குழி மூடப்பட்டு அதில் தார் ரோடு போடும் பணி நகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்ெகாள்ளப்பட்டது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்துக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.
பொதுமக்கள், கோபி.
Related Tags :
Next Story