ஆள்மாறாட்டம் செய்து வீட்டை அபகரித்த விவசாயி கைது
ஆள்மாறாட்டம் செய்து வீட்டை அபகரித்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
திருச்சி:
டிபன் கடை உரிமையாளர்
திருச்சி மாவட்டம் கோப்பு தெற்கு, கீரிக்கல் மேடு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன்(வயது 51). டிபன் கடை உரிமையாளர். இவர் கடந்த 1996-ஆம் ஆண்டு அதே பகுதியில் 3.75 சென்ட் நிலம் வாங்கினார்.
பின்னர் பட்டா மாற்றம் செய்து வீட்டின் பத்திரத்தை ஸ்ரீரங்கம் வட்ட கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்து கடன் வாங்கி அந்த நிலத்தில் அவர் வீடு கட்டினார். வீடு கட்டியதுபோக 654 சதுர அடி நிலம் காலியாக இருந்தது. இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு வீட்டுக்கடன் முடிவடைந்ததை தொடர்ந்து கூட்டுறவு சங்கத்தில் இருந்து பத்திரத்தை மீட்டார்.
ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு
பின்னர் தனது இடத்தில் வில்லங்கம் ஏதும் உள்ளதா? என்று பார்த்தார். அப்போது அர்ஜுனன் கட்டிய வீட்டை, கோப்பு இனாம்புலியூரை சேர்ந்த விவசாயி அன்பழகன்(55) என்பவர் கடந்த 10.6.2005 அன்று திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், அர்ஜுனன் கிரயம் செய்து கொடுத்ததுபோல் ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருச்சி சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் நடத்தப்படும் மக்கள் கோர்ட்டில் அர்ஜுனன் வழக்கு தொடுத்தார். இதில், விசாரணைக்கு, அன்பழகன் சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. புகார் தொடர்பாக இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
விவசாயி கைது
விசாரணையில், சங்கிலிமுத்து என்பவரை ஆள்மாறாட்டம் செய்து அர்ஜுனன் என்ற பெயரில் அன்பழகன் பத்திரப்பதிவு செய்து இருந்தது உறுதியானது. தற்போது ஆள்மாறாட்டம் செய்த சங்கிலிமுத்து இறந்து விட்டார்.
இதைத்தொடர்ந்து அன்பழகனை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து திருச்சி மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story