சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை


சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 29 April 2022 4:25 AM IST (Updated: 29 April 2022 4:25 AM IST)
t-max-icont-min-icon

சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

திருச்சி:
திருச்சியில் சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு சிவன் கோவில்களில் நேற்று மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்படி, திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவிலில் பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கும், நந்தி தேவருக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் சுப்பிரமணியபுரத்தில் புதுக்கோட்டை சாலையில் உள்ள நவசக்தி மாணிக்க விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதேபோல் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில், பெரியகடை வீதியில் உள்ள கமலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
தா.பேட்டையில் காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடந்தன. இதைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல் தா.பேட்டை அருகே காருகுடி கிராமத்தில் ரேவதி நட்சத்திர தலமான கைலாசநாதர் கோவில், மங்கலம் கிராமத்தில் மங்கைபாகேஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Next Story