இறப்பு சான்றிதழுக்கு ரூ.1,000 லஞ்சம்; கிராம நிர்வாக அலுவலர் கைது


இறப்பு சான்றிதழுக்கு ரூ.1,000 லஞ்சம்; கிராம நிர்வாக அலுவலர் கைது
x
தினத்தந்தி 29 April 2022 4:26 AM IST (Updated: 29 April 2022 4:26 AM IST)
t-max-icont-min-icon

இறப்பு சான்றிதழுக்கு ரூ.1,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

சமயபுரம்:

லஞ்சம் கேட்டார்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் சுரேஷ். இவர் மண்ணச்சநல்லூர் தாலுகாவில் உள்ள எதுமலை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான ராமர், கடந்த 8-ந்தேதி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து அவரது மனைவி அமிர்தம்(வயது 62) என்பவர், தன்னுடைய கணவரின் இறப்பு சான்றிதழ் கேட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்துள்ளார். இது பற்றி விசாரணை செய்த கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், ‘சான்றிதழ் தர வேண்டும் என்றால் 1,000 ரூபாய் கொடுக்க வேண்டும்’ என்று கேட்டதாக தெரிகிறது.
கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த அமிர்தம், லஞ்சம் கொடுக்க விரும்பாமல், இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலரை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீசார் நேற்று எதுமலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே மறைந்து நின்று கண்காணித்தனர்.
அப்போது போலீசார் அறிவுரையின்படி அங்கு வந்த அமிர்தம், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷிடம் 1,000 ரூபாயை கொடுத்தார். அவர் அதை பெற்றபோது, மறைந்திருந்த போலீசார் அங்கு விரைந்து வந்து அவரை பிடித்து கைது செய்து, விசாரணை நடத்தினர்.
இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story