ஸ்ரீரங்கத்தில் இன்று ரெங்கநாதர் கோவில் தேரோட்டத்தையொட்டி 1000 போலீசார் பாதுகாப்பு
ஸ்ரீரங்கத்தில் இன்று ரெங்கநாதர் கோவில் தேரோட்டத்தையொட்டி 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி:
சித்திரை தேர்த்திருவிழா
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் 8-ம் திருநாளான நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 8.30 மணிக்கு ரெங்கவிலாஸ் மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து சித்திரை தேர் அருகே வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4.45 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு சித்திரைத்தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேருகிறார். இதையடுத்து அதிகாலை 5.30 மணி முதல் அதிகாலை 6.15 மணிக்குள் மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் காலை 6.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது.
தேர் கீழ சித்திரை வீதியில் இருந்து புறப்பட்டு தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி ஆகிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையை அடையும். தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட, மாநகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை (சனிக்கிழமை) இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடியிறக்கப்படும். 1-ந் தேதி இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.
கலெக்டர், கமிஷனர் ஆய்வு
இந்தநிலையில் ஸ்ரீரங்கத்தில் தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் மாவட்ட கலெக்டர் சிவராசு, மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் நேற்று ஆய்வு நடத்தினர். அதன்பிறகு அவர்கள் நிருபா்களிடம் கூறியதாவது:-
ஸ்ரீரங்கம் தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தேர் செல்லும் வழிநெடுகிலும் மின்வயர்கள், மரங்கள் ஏதும் உள்ளதா? என பார்த்துள்ளோம். மின்சாரத்துறை, அறநிலையத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, மாநகராட்சி என அனைத்துத்துறைகளும் ஒருங்கிணைந்து கடந்த ஆண்டு நடந்ததைபோலவும், அதைவிட 100 சதவீதம் கூடுதல் பாதுகாப்புடனும் தேர்த்திருவிழாவை நடத்த வேண்டும் என்பதே அரசின் குறிக்கோளாகும்.
ஏனென்றால் தஞ்சையில் நடந்ததுபோல் ஒரு சிறு அசம்பாவிதம்கூட நடந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் தேர்த்திருவிழாவின்போது நடந்த விபத்து தொடர்பாக உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., தீயணைப்புத்துறை டி.ஜி.பி. ஆகியோர் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்தி உரிய அறிவுரைகளை வழங்கி உள்ளனர். இந்தநிலையில் ஸ்ரீரங்கத்தில் தேர்த்திருவிழா நடைபெற உள்ளதால் அனைத்துத்துறை அதிகாரிகளும் வந்து ஆய்வு செய்துள்ளோம்.
1,000 போலீசார் பாதுகாப்பு
தேர்த்திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்துவிட்டு செல்லும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று நடக்கும் தேரோட்டத்தையொட்டி 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கடந்த முறையை காட்டிலும் 300 முதல் 400 பேர் வரை கூடுதலாக பாதுகாப்பு பணிக்கு நியமித்துள்ளோம். பக்தர்களின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவம் நடக்காமல் தடுக்கும் வகையில் தனியாக குற்றப்பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ஆய்வின்போது, போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு, அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். இதற்கிடையே ஸ்ரீரங்கத்தில் தேரோட்டம் நடைபெற உள்ளதையொட்டி அங்கு சாலையோர ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டன.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை
ஸ்ரீரங்கம், ஏப்.29-
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூ மாலை தொடுக்கும் தொண்டு செய்து பெருமாளுக்கு மனைவியானார். ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்குமிடையே சம்பந்தமும், உறவும் மங்கள பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலமாக இருந்து வந்தது. எனினும் பல காரணங்களால் அவ்வழக்கம் இடையில் நின்று போனது. பின்னர் இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டத்திற்கு முதல் நாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்தில் இருந்தும் மங்களப்பொருட்கள் பரிவர்த்தனை நடந்து வருகிறது.
வஸ்திர மரியாதை
இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு நேற்று காலை 9.30 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்ட பட்டு வஸ்திரங்கள், மலர்கள் மற்றும் இலைகளால் செய்யப்பட்ட கிளிகள், பழங்கள் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் கருட மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. பின்னர் அவை மேளதாளத்துடன் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஸ்தானிகம் ரமேஷ் பட்டர், சுதர்சன் பட்டர் உள்ளிட்ட குழுவினர் வஸ்திர மரியாதையை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, திருச்சி மண்டல இணை ஆணையர் செல்வராஜ், கோவில் உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், நிர்வாகிகளிடம் சமர்ப்பித்தனர். இன்று சித்திரை தேரோட்டத்தின்போது தேரில் எழுந்தருளும் நம்பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூர் வஸ்திரங்களை அணிந்து தேரோட்டம் கண்டருளுகிறார்.
Related Tags :
Next Story