அஞ்செட்டியில் அரசுப்பள்ளி மாணவியிடம் சில்மிஷம்; தலைமை ஆசிரியருக்கு அடி-உதை-கார் கண்ணாடி உடைப்பு


அஞ்செட்டியில் அரசுப்பள்ளி மாணவியிடம் சில்மிஷம்; தலைமை ஆசிரியருக்கு அடி-உதை-கார் கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 29 April 2022 11:33 AM IST (Updated: 29 April 2022 11:33 AM IST)
t-max-icont-min-icon

அஞ்செட்டி அருகே அரசுப்பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி அருகே அரசுப்பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைமை ஆசிரியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் வசித்து வருபவர் லாரன்ஸ். இவர் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெம்பகரை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த பள்ளியில் மொத்தம் 102 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் லாரன்ஸ் உள்பட மொத்தம் 4 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். நேற்று தலைமை ஆசிரியர் லாரன்ஸ் மட்டும் பள்ளிக்கு சென்றுள்ளார். மற்ற 3 ஆசிரியர்களும் பணி நிமித்தமான கூட்டத்திற்கு சென்றுள்ளனர்.
பள்ளிக்கு சென்ற தலைமை ஆசிரியர் லாரன்ஸ், அந்த பள்ளியில் படித்து வரும் 7-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அந்த மாணவி உடனடியாக அங்கிருந்து வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி உள்ளார்.
அடி-உதை
இதை கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த அவர்கள் தலைமை ஆசிரியர் லாரன்சை அடித்து உதைத்து கடுமையாக தாக்கி உள்ளனர்.
இதையடுத்து தப்பித்தோம், பிழைத்தோம் என தலைமை ஆசிரியர் லாரன்ஸ் தனது காரில் ஏறி அங்கிருந்து தேன்கனிக்கோட்டைக்கு செல்ல முயன்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற கும்பல் அவரது கார் கண்ணாடியை உடைத்ததுடன், கார் மீது கல்வீசியும் தாக்கி உள்ளது. அதன்பிறகு தாக்குதலுக்கு ஆளான அவர் அவர்களிடம் இருந்து உயிர் பிழைத்து தேன்கனிக்கோட்டைக்கு சென்றுள்ளார். 
இந்த சம்பவம் குறித்து அறிந்த அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அன்பழகன், அஞ்செட்டி போலீசார் ஆகியோர் கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story