போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாணாபுரம்
சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிறையில் சாவு
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா இளையாங்கன்னியை அடுத்த தட்டரணை பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 48). இவரை சாராயம் விற்றதாக கூறி திருவண்ணாமலை மதுவிலக்கு போலீசார் கடந்த 26-ந்் தேதி வழக்குப் பதிவு செய்து தங்கமணியை கைது செய்து திருவண்ணாமலை கிளை சிறையில் அடைத்தனர்.
அங்கு அவருக்கு திடீரெனஉடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி தங்கமணி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதைத்தொடர்ந்து தங்கமணியின் உடல் பிரேத பரிசோதனைக்கா திருவண்ணாமலை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டது.
உறவினர்கள் சாலை மறியல்
நேற்று தங்கமணியின் மனைவி, மகன்கள் மற்றும் உறவினர்கள் இதுகுறித்து திருவண்ணாமலை கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அதில் விசாரணை என்ற பெயரில் தங்கமணியை அழைத்துச் சென்று போலீசார் அடித்து கொலை செய்து விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இன்று அவரது சொந்த ஊருக்கு வந்த கிராம மக்கள் மாவட்ட எல்லையான தென்பெண்ணை ஆற்று மேம்பாலம் அருகே வாழவச்சனூர் -கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை சாலையில் மரங்களை போட்டும், வாகனங்களை நிறுத்தியும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
நீதிபதி விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை, குணசேகரன், ரமேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்ளிட்ட போலீசார் சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நீதிபதி முன்னிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நீங்கள் எதுவாக இருந்தாலும் திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு தங்களின் கோரிக்கையை நீதிபதியிடம் கூறுங்கள் என்று கூறினர்.
இதனால் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.
இந்த சாலை மறியலால் கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story