நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் நெடுஞ்சாலையில் நெல்லை கொட்டி வைத்திருக்கும் விவசாயிகள்
நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் நெடுஞ்சாலையில் நெல் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் 144- தண்டலம் கிராம ஊராட்சிக்கு உட்பட்டு தண்டலம், நெல்வாய், கள்ளிப்பட்டு போன்ற கிராமங்கள் உள்ளது. இங்கு நெல் பயிரிடப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆண்டுதோறும் நெல்வாய் கிராமத்தில் திறக்கப்படும் அரசு கொள்முதல் நிலையம் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கும் வேளாண் துறை அதிகாரிகளுக்கும், பலமுறை விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தும், நேரில் சென்று வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உரிய காலத்தில் திறக்கப்படாததால், கிராமப்புறங்களில் பயிரிடப்பட்டு அறுவடை செய்த நெல்லை, விற்பனை செய்ய முடியாமல் பரந்தூர்-சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் குவியல், குவியலாக கொட்டி வைத்து கிராம விவசாயிகள் காத்து கிடக்கின்றனர். நெடுஞ்சாலைகளில் குவியல், குவியலாக நெல் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.
6 ஆண்டுகளாக நெல்வாய் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு நெல் கொள்முதல் செய்து வந்த நிலையில், இந்த ஆண்டு தொடூர் கிராமத்திற்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாற்றி உள்ளதாக தெரிகிறது. தொடூர் கிராமத்திற்கு அறுவடை செய்த நெல்லை கொண்டு செல்ல காலதாமதமும், போக்குவரத்து செலவும் அதிகமாகும் என்பதால், ஏற்கனவே உள்ளபடி நெல்வாய் கிராமத்திலேயே கொள்முதல் நிலையத்தை திறந்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story