100 நாள் திட்டத்தில் வேலை செய்பவர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த விவசாயிகள் கோரிக்கை
100 நாள் திட்டத்தில் வேலை செய்பவர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
வேலூர்
100 நாள் திட்டத்தில் வேலை செய்பவர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
குறைதீர்வு நாள் கூட்டம்
வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வேளாண்மை இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் தீட்சித், வேலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுண அய்யப்பத்துரை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்து பேசினார்கள். அவற்றின் விவரம் வருமாறு:-
விவசாய பணிகளுக்கு...
வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் நெல் அறுவடை செய்யும் எந்திரங்கள் மானிய விலையில் வழங்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும் அளவினை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் மண் அள்ள அனுமதிக்க வேண்டும். மேல்பாடியில் கால்நடை டாக்டர் இல்லை. அங்கு செல்வதற்கு போதிய பஸ் வசதியும் இல்லை.
அகரம்சேரி ஏரியில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் 80 சதவீதம் தண்ணீர் வரத்து இருந்தது. பல லட்சம் செலவு செய்தும் ஒரு மதகில் கூட தண்ணீர் வரவில்லை.
குடியாத்தம், ஊசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே யூரியா தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியாத்தம், பேரணாம்பட்டு தாலுகாவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்பவர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடிக்கடி மின்வெட்டு
காட்டுபன்றிகள், எருமைகளால் பயிர்கள் அதிகளவில் சேதமடைகிறது. எனவே மின்வேலி அமைத்து தர வேண்டும். பேரணாம்பட்டு பகுதியில் குரங்குகளால் பயிர்கள் சேதமடைவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. அதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். விவசாயிகள் பயிர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. விவசாயிகளுக்கு புதிய மின்இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த பின்னர் கலெக்டர் கூறுகையில், மாவட்டம் முழுவதும் யூரியா தட்டுபாடுன்றி கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். ஓரிருமாதங்களில் பருவமழை பெய்ய உள்ளது. எனவே ஏரி, ஆறு, குளங்களை தூர்வாருதல், நீர்வரத்து கால்வாயை சீரமைத்தல், சிறு அணை, தடுப்பணையை பழுதுநீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்து பணிகளை துரிதமாக செய்து முடிக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்பவர்களை விவசாய பணிகளில் ஈடுபடுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை பற்றியும், புதிய ரக எந்திரங்களின் பயன்பாடு குறித்தும் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் முன்னிலையில் விளக்கம் அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story