‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயணிகளின் கோரிக்கை நிறைவு
சென்னை ராஜீவ்காந்தி பஸ் நிறுத்தத்தில் பஸ்சின் வழித்தட எண் கொண்ட பெயர் பலகை பழுதடைந்து இருப்பது குறித்து பயணிகள் விடுத்த கோரிக்கை செய்தியானது ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றி, பஸ் நிறுத்தத்தில் வழித்தட எண் பெயர் பலகையை புதுப்பித்துள்ளனர். இதனால் மகிழ்ந்த பயணிகள் உடனடியாக செயல்பட்ட அதிகாரிகளுக்கும், இதுகுறித்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
மின்வாரியத்தின் உடனடி நடவடிக்கை
திருவள்ளூர் மாவட்டம் காரனோடை ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ள மின்கம்பத்தில் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து அபாயகரமாக காட்சியளிப்பது தொடர்பாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த நிலையில் மின்வாரியம் எடுத்த துரித நடவடிக்கையால் மின்கம்பம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட மின்வாரிய ஊழியர்களுக்கும், அதற்கு காரணமாக இருந்த ‘தினத்தந்தி’க்கும் அப்பகுதி மக்கள் தங்களது பாராட்டை தெரிவித்துள்ளனர்.
சாலை வசதி வேண்டும்
காஞ்சீபுரம் மாவட்டம் நெமிலிச்சேரி ஸ்ரீநாத் நகர் அருகே உள்ள ராஜேஷ் நகரில் போதுமான சாலை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் கற்கள் நிறைந்த மண் சாலையிலேயே அப்பகுதி மக்கள் பயணித்து வருகின்றனர். மழைக்காலங்களில் சாலை மிகவும் மோசமடைந்து நடந்து செல்லக்கூட சிரமமாக இருக்கின்றது. எனவே அதிகாரிகள் கவனித்து இப்பகுதியில் சாலைவசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
- ஜெயக்குமார், நெமிலிச்சேரி.
பராமரிக்கப்படாத பஸ் நிலையம்
சென்னை பெரம்பூர் திரு.வி.க. நகர் பஸ் நிலையத்தின் உள்ளே இரவில் படுக்கும் நபர்கள் அங்கேயே சிறுநீர் கழிப்பது வாடிக்கையாகி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பஸ் ஏற வரும் பயணிகள் மூக்கை பொத்திக்கொண்டு பஸ் நிலையத்தில் நிற்கும் அவலம் நிலவுகிறது. மேலும் முகம் சுழிக்கும் வகையிலும் சுகாதாரமற்ற முறையிலும் பஸ் நிலையம் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. எனவே பஸ் நிலையத்தை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
- செந்தில் குமரன், திரு.வி.க. நகர்.
திறந்த நிலையில் பாதாள சாக்கடை
சென்னை கீழ்ப்பாக்கம் உமையாள் தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் மூடி உடைந்து உள்ளே சென்றுள்ளது. மூடி இல்லாததால் பாதாள சாக்கடை ஆபத்தான நிலையில் திறந்தபடியே இருக்கின்றது. இதேபோல் கொளத்தூர் ராகவன் தெருவிலும் பூங்கா அருகே உள்ள சில மழைநீர் வடிகால்வாயின் மூடிகள் சேதமடைந்துள்ளது. இரவு நேரங்களில் பாதசாரிகள் தவறி விழுந்து விடவும் வாய்ப்புள்ளது. மாநகராட்சி நிர்வாகம் கவனித்து மேற்கண்ட பகுதிகளில் உடனடி தீர்வு காண வேண்டும்.
- பாதசாரிகள்.
குப்பைகளால் சூழ்ந்த அங்கன்வாடி
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி இ-பிளாக் 6-வது குறுக்கு தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஒட்டி குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. குப்பைகளை அகற்றி, அங்கன்வாடி மையத்தை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- பொதுமக்கள்.
கூடுதல் பஸ் வசதி தேவை
சென்னை மயிலாப்பூரில் இருந்து தியாகராயநகர் செல்லும் மாநகர பஸ் (தடம் எண்:5பி) கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த டிசம்பர் மாதம் 2 பஸ்களை மட்டும் இயக்கிவருகின்றது. தற்போது போக்குவரத்து பயன்பாடு அதிகமாகியுள்ளதால், மேலும் 2 பஸ்களை பயனாளிகளின் நலன் கருதி, கூடுதலாக இயக்க போக்குவரத்து துறை ஆவன செய்ய வேண்டும்.
- சி.சேதுராமன், சமூக ஆர்வலர்.
கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
சென்னை சேத்துப்பட்டு ஹேரிங்டன் சாலை 8-வது அவென்யூவில் சாலை மிகவும் மோசமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் வாகன ஓட்டிகள் சென்று வருவதற்கு பெரும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தார்சாலை அமைத்து தர வேண்டுகிறோம்.
- உஷா, சேத்துப்பட்டு.
அறிவிப்பு பலகை எங்கே?
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு வான்மதி நகரில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களின் இருப்புப்பட்டியல் விபரம் குறித்து எந்தவொரு அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. தினசரி பொருட்கள் இருப்பு விவரம் தெரியாமல் பொதுமக்கள் திணறுகின்றனர். இப்பகுதி பொதுமக்களின் வேண்டுகோள்கிணங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
- ரமேஷ், வேப்பம்பட்டு.
ஆபத்தை உணராதது ஏனோ!
சென்னை பெருங்குடி ஜல்லடியான்பேட்டையில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவில் சுழல் சறுக்கு மரம் மிகவும் பழுதாகி உள்ளது. ஓட்டைகள் விழுந்து குழந்தைகள் விளையாடுவதற்கே மிகவும் சிரமமாக உள்ளது. கால், கை சிக்கிக்கொள்ளும் என்ற ஆபத்தை உணராமல் குழந்தைகள் விளையாடுகின்றன. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சுழல் சரக்கு மரத்தை சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- கமலக்கண்ணன், பள்ளிக்கரணை.
Related Tags :
Next Story