கூடலூர் 1-ம் மைல் -செம்பாலா இடையே சாலையை அகலப்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு


கூடலூர் 1-ம் மைல் -செம்பாலா இடையே சாலையை அகலப்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 29 April 2022 8:17 PM IST (Updated: 29 April 2022 8:17 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் 1-ம் மைலில் இருந்து செம்பாலா செல்லும் சாலையை அகல படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கூடலூர்

கூடலூரில் 1-ம் மைலில் இருந்து செம்பாலா செல்லும் சாலையை அகல படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

ஆய்வு பணி தொடக்கம்

கேரளா- கர்நாடகாவை இணைக்கும் பகுதியாக தமிழகத்தின் கூடலூர் அமைந்துள்ளது. இதனால் 3 மாநிலங்கள் மட்டுமின்றி வடமாநில சரக்கு வாகனங்கள், சுற்றுலா பயணிகளின் கார்கள் தினமும் கூடலூர் வழியாக இயக்கப்படுகிறது. இதேபோல் கேரளா- கர்நாடகாவுக்கு இடையேயும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கூடலூரில் போக்குவரத்து வாகனங்கள் அதிகளவு இயக்கப்படுகிறது.இதுதவிர சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க கூடலூர் 1-ம் மைலில் இருந்து ஈட்டி மூலா வழியாக செம்பாலாவுக்கு செல்லும் சாலையை அகலப்படுத்தும் அதற்கான ஆய்வு பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் தொடங்கியுள்ளனர்.

கணக்கெடுப்பு

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது:- செம்பாலா- 1-ம் மைல் சாலை கோழிக்கோடு மற்றும் சுல்தான்பத்தேரி செல்லும் சாலைகளின் இணைப்பு பகுதியாக உள்ளது. இதனால் சீசன் காலங்களில் மலப்புரம், கோழிக்கோடு பகுதியில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் முதுமலை, மைசூரு செல்வதற்கு பழைய பஸ் நிலையம் வழியாக வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் கூடலூர் செம்பாலா- 1-ம் மைல் சாலையை அகலப்படுத்தினால் போக்குவரத்தை சீசன் காலங்களில் திருப்பி விடுவதன் மூலம் புதிய பஸ் நிலையம் வழியாக விரைவாக வாகனங்கள் நகருக்கு வெளியே சென்றுவிடும். இதேபோல் மைசூரு உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் ரவுண்டானா வழியாக 1-ம் மைல்- செம்பாலா வழியாக நகருக்கு வெளியே செல்லும் வகையில் வாகனங்கள் திருப்பி விடப்படும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் 1-ம் மைல்- செம்பாலா சாலையை அகலப்படுத்துவதற்கான முதற்கட்ட ஆய்வு பணி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக இந்த சாலைகள் வழியாக இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story