கோத்தகிரியில் வாகன சோதனை: சாலை விதிகளை மீறியவர்களுக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்
கோத்தகிரியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
கோத்தகிரி
கோத்தகிரியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
வாகன தணிக்கை
கோடை சீசனையொட்டி கோத்தகிரி சாலை ஒருவழிப்பதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே கனரக வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டதன் காரணமாக சமவெளிப் பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு கோத்தகிரி வழியாக ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதையொட்டி போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் மற்றும் ரோந்து வாகன போலீசார் தொடந்து தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருவதுடன், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
3 பேர் மீது வழக்கு
இந்தநிலையில் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீசார் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் செல்லும் சாலைகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தலைகவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள், ஓட்டுனர் உரிமம், வாகனங்களின் உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள், பகல் நேரத்தில் கனரக வாகனங்களை இயக்கக் கூடாது என்கிற உத்தரவை மீறி வாகனங்களை இயக்கியவர்களுக்கு மொத்தம் 15 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் குடிபோதையில் வாகனங்களை இயக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து நீதிமன்றம் மூலம் 35 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.
ரூ.75 ஆயிரம் அபராதம்
இதே போல ரோந்துப் பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் போலீசார் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் போக்குவரத்து விதிகளை மீரியவர்களுக்கு 24 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று ஒரு நாளில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு 75 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story