மூதாட்டி கொலை வழக்கில் 3 பேர் கைது
வடுவூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் நகைக்காக இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.
வடுவூர்:
வடுவூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் நகைக்காக இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.
மூதாட்டி மாயம்
திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள மேலநெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 55). இவருடைய மகன்கள் காமராஜ், கனகராஜ் ஆகியோர் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் இவர், தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணவேணி திடீரென மாயமானார். இதுதொடர்பாக அவருடைய மகன் கனகராஜ் வடுவூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 20-ந் தேதி புகார் அளித்தார்.
போலீசில் புகார்
அந்த புகாரில், கிருஷ்ணவேணி 6 பவுன் நகைகள் அணிந்திருந்ததாகவும், 20 பவுன் நகைகள் வீட்டில் இருந்தது எனவும், எனவே நகைக்காக யாரேனும் அவரை கடத்தி சென்றிருக்கலாம் என்றும் கூறி இருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோப்பநாய் மூலம் துப்பு துலக்கும் பணியை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சித்ரா பவுர்ணமி தினத்தன்று அந்த கிராமத்தில் நடந்த சாமி வீதி உலாவில் கிருஷ்ணவேணி கலந்து கொண்டதும், அதற்கு பின்னர் அவரை காணவில்லை என்பதும் தெரியவந்தது. அவருடைய செல்போன் எண்ணை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டபோது கடைசியாக அவர் இருந்த பகுதி மகாதேவபட்டினம் என்பது தெரிய வந்தது.
சாக்கு மூட்டையில் உடல்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடுவூர் அருகே முக்குளம் சாத்தனூர் வயல்வெளியில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு அழுகிய நிலையில் கிருஷ்ணவேணியின் உடல் கிடந்தது. இதனையடுத்து போலீசார் கிருஷ்ணவேணியின் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கிருஷ்ணவேணி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு இருப்பதும், அவருடைய உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசி சென்றிருப்பதும் தெரியவந்தது.
3 பேரை பிடித்து விசாரணை
இதையடுத்து போலீசார் பெண் மாயம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்றி கிருஷ்ணவேணி நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் மேலநெம்மேலி கிராமத்தை சேர்ந்த தனியரசு(45), சின்னப்பா என்கிற ஜெயச்சந்திரன்(60), மகாதேவபட்டினம் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம்(45) ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
நகைக்காக நடந்த கொலை
கிருஷ்ணவேணி வீட்டின் அருகே அடுத்தடுத்து 3 பேரும் வசித்து வந்துள்ளனர். அப்போது மூதாட்டிக்கும், 3 பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த சித்ரா பவுர்ணமி அன்று நடந்த திருவிழாவினை பயன்படுத்தி கிருஷ்ணவேணியின் வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்கி, நகைகளை பறித்துகொண்டு அவரை கொலை செய்துள்ளனர்.
பின்னர் அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி பழையாறு வாய்க்காலில் வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர். மேலும் மூதாட்டியின் செல்ே்பானை சுவிட்ச்-ஆப் செய்துவிட்டு அங்கேயே வீசி சென்றுள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
3 பேர் கைது
இதையடுத்து வடுவூர் போலீசார் பிடிபட்ட தனியரசு, ஜெயச்சந்திரன், மாணிக்கம் ஆகிய 3 பேரையும் கைது செய்து மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நாகப்பட்டினம் சிறையில் அடைத்தனர்.
முன்விரோதம் மற்றும் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
--
-----
Related Tags :
Next Story