பிளஸ்-2 பொதுத்தேர்வு: தூத்துக்குடியில் 20 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 85 தேர்வு மையங்களில் 20 ஆயிரத்து 370 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
தூத்துக்குடி:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளி மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நடந்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு வருகிற 5-ந் தேதியும், பிளஸ்-1 தேர்வு 9-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற 6-ந்தேதியும் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு பொதுத்தேர்வை எழுதுவதற்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 842 பேரும், தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 462 பேரும், திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 66 பேரும் ஆக மொத்தம் 20 ஆயிரத்து 370 பேர் எழுதுகின்றனர். பிளஸ்-1 தேர்வை கோவில்பட்டியில் 6 ஆயிரத்து 130 பேரும், தூத்துக்குடியில் 9 ஆயிரத்து 605 பேரும், திருச்செந்தூரில் 5 ஆயிரத்து 286 பேரும் ஆக மொத்தம் 21 ஆயிரத்து 21 பேர் எழுதுகின்றனர்.
இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் 85 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வினாத்தாள்கள் மாவட்டத்தில் 11 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
இதேபோன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 214 பேரும், தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 55 பேரும், திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 730 பேரும் ஆக மொத்தம் 23 ஆயிரத்து 999 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக 103 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story