மின்சாதனங்கள் வினியோக நாடுகளில் இந்தியாவை முக்கியமான நாடாக மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி வேண்டுகோள்
மின்சாதனங்களின் வினியோக சங்கிலித்தொடர் நாடுகளில் இந்தியாவை முக்கியமான நாடாக மாற்ற வேண்டும் என்று தொழில்துறையினருக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு:
தொழில்நுட்ப புரட்சி
மத்திய அரசின் மின்சாதனம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் செமிகான் இந்தியா மாநாடு-2022 தொடக்க விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-
இந்தியாவில் அடுத்த தொழில்நுட்பு புரட்சி ஏற்படுவதற்கான வழியை ஏற்படுத்தி வருகிறோம். நாட்டில் 6 லட்சம் கிராமங்களுக்கு அகன்ற அலைவரிசை இணையதள வசதியை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 5ஜி அலைவரிசை திறன், இணையதள வசதி, தூய்மையான மின்சார தொழில்நுட்ப திட்டங்களில் முதலீடு செய்கிறோம். இந்தியாவில் மின்சாதனங்கள் பயன்பாடு வருகிற 2026-ம் ஆண்டுக்குள் ரூ.6 லட்சம் கோடியையும், 2030-ம் ஆண்டுக்குள் அது ரூ.8¼ லட்சம் கோடியையும் தாண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பொருளாதார வளர்ச்சி
இந்தியா வலுவான-ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இங்கு புதிதாக தொழில் தொடங்குவதற்கான சுற்றுச்சூழல் நன்றாக உள்ளது. அதனால் புதிய தொழில்கள் (ஸ்டார்ட்-அப்ஸ்) அதிகமாக தொடங்கப்படுகின்றன. அந்த தொழில் நிறுவனங்களின் ஒவ்வொன்றின் வர்த்தக மதிப்பும் சில வாரங்களில் ரூ.7,500 கோடியை (யுனிகார்ன்) தாண்டி வருகிறது.
மின்சாதனங்களின் வினியோக சங்கிலித்தொடர் நாடுகளில் இந்தியாவை முக்கியமான நாடாக மாற்ற தொழில்துறையினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்க நவீன தொழில்நுட்பம், உயர்ந்த தரம், மற்றும் அதிக நம்பகத்தன்மை ஆகிய தத்துவங்களின் அடிப்படையில் பணியாற்ற வேண்டும். நமது நாட்டில் 130 கோடி மக்களுக்கு டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
டிஜிட்டல் தொழில்நுட்பம்
இந்தியாவில் பின்பற்றப்படும் யு.பி.ஐ. நடைமுறை உலகில் திறன்மிக்க சிறந்த பணபரிமாற்ற கட்டமைப்பு ஆகும். அனைத்து துறைகளிலும் மக்களின் வாழ்க்கையை உயர்த்த நமது நாடு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. சுகாதாரம் மற்றும் நலத்திட்டங்கள் சார்ந்த விஷங்கள் முதல் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் பொருளாதார ரீதியாக பலப்படுத்துதல் வரை டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அரசு பயன்படுத்துகிறது.
21-வது நூற்றாண்டுக்கு தேவையான மனித வளங்களை உருவாக்கும் நோக்கத்தில் இளைஞர்களின் திறனை மேம்படுத்த அரசு அதிகளவில் முதலீடு செய்து வருகிறது. இந்தியாவில் மிக திறமையான மின்னணுவியல் பொறியாளர்கள் உள்ளனர். உலகில் உள்ள மொத்த மின்சாதன வடிவமைப்பு பொறியாளர்களில் 20 சதவீதம் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள்.
ஒத்துழைப்பு வழங்கவில்லை
இந்தியாவில் உள்ள உற்பத்தி நிறுவனங்களை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரவலால் நாடு பாதிக்கப்பட்டு இருந்தபோது, மத்திய அரசு மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தியது மட்டுமின்றி நமது பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி இருக்கிறது. முன்பு இருந்த ஆட்சிகளின் காலத்தில் தொழில் நிறுவனங்கள் முதலீடுகள் செய்ய தயாராக இருந்தன. ஆனால் அந்த அரசுகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை.
கடந்த காலங்களில் தொழில் தொடங்குவதற்கு பல்வேறு இடையூறுகள் இருந்தன. எளிதாக தொழில் தொடங்க முடியாத நிலை இருந்தது. ஆனால் அந்த நிலை தற்போது மாறியுள்ளது. எளிதாக தொழில் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொழில்துறை கடுமையாக பணியாற்றும்போது, அரசும் அதே போல் கடுமையாக செயலாற்ற வேண்டும். இந்தியாவில் தொழில் தொடங்குவதை எளிதாக்க அரசு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இந்த திசையில் அவற்றில் இருந்த 25 ஆயிரம் சிக்கல்களை அரசு கைவிட்டுள்ளது. தொழில் உரிமங்களை தானியங்கி அடிப்படையில் நீட்டிப்பது உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தொழில்களை ஒழுங்குப்படுத்துதலில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வேகத்தையும், வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வந்துள்ளது.
இவ்வாறு மோடி பேசினார்.
Related Tags :
Next Story