கர்நாடகத்தில் 9 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடக்கம்; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேச்சு


கர்நாடகத்தில் 9 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடக்கம்; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேச்சு
x
தினத்தந்தி 29 April 2022 8:39 PM IST (Updated: 29 April 2022 8:39 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 9 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

பெங்களூரு:

பட்டமளிப்பு விழா

  அரசு பெங்களூரு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு மருத்துவ படிப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:-

  நாட்டில் இன்று மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்வியில் பெண்கள் அதிகமாக சாதிக்கிறார்கள். இது பெண்கள் கல்வி-பொருளாதார ரீதியாக பலமடைந்து வருவதை காட்டுகிறது. சமுதாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஏழைகளின் குழந்தைகள் கூட மருத்துவம் படிக்கும் நிலை உருவாகியுள்ளது. பெங்களூரு மருத்துவ கல்லூரி, நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பெருமைமிகு கல்லூரி ஆகும்.

மரியாதை கிடைக்கிறது

  இந்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்று மாணவர்கள் கனவு காண்கிறார்கள். இங்கு படிக்கும் மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இங்கு நல்ல கல்வி கிடைப்பதுடன் சமுதாயத்தில் நல்ல மரியாதை கிடைக்கிறது. மருத்தவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு உரிய கவுரவம் கிடைக்கிறது. மருத்துவம் படித்தவர்கள் இந்த சமுதாயத்தின் பெருமை மிக்கவர்கள்.

  கர்நாடகத்தில் மொத்தம் 65 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. விரைவில் 4 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. அத்துடன் 3 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் 9 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டின் மொத்த்த மருத்துவ மாணவர்களில் கர்நாடகத்தின் பங்கு 30 சதவீதம் ஆகும்.

சேவையாற்றும் பணி

  கொரோனா பரவல் காலத்தில் மருத்துவ மாணவர்கள் சிறப்பான முறையில் சேவையாற்றினர். வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை நீங்கள் படிக்கும் காலத்திலேயே வெற்றிகரமாக சந்தித்துள்ளீர்கள். இது உங்களுக்கு மிகப்பெரிய பாடமாக இருக்கும். இன்று பட்டம் பெறும் நீங்கள் இனிமேல் தான் வாழ்க்கையை தொடங்குகிறீர்கள். கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் மற்றும் அதன் மூலம் கிடைத்த அனுபவங்களை நீங்கள் உங்கள் வாழ்க்கையின் கடைசி வரை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

  எல்லா நேரத்திலும் சமுதாயம் பற்றி மட்டுமே நீங்கள் சிந்திக்க வேண்டும். மத்திய அரசின் ஆயுஸ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டம் அனைவருக்கும் இலவச சிகிச்சையை வழங்குகிறது.

காப்பீட்டு வசதி

  உலகிலேயே இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்கும் ஒரே நாடு இந்தியா தான். ஒருவருக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டு வசதி வழங்கப்படுகிறது. நாட்டின் ஏழை மக்களின் உடல் ஆரோக்கியம் மீது அரசு அதிக அக்கறை செலுத்துகிறது.
  இவ்வாறு சுதாகர் கூறினார்.

Next Story