கள்ளர்பிரான் சுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்


கள்ளர்பிரான் சுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 29 April 2022 8:40 PM IST (Updated: 29 April 2022 8:40 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான் சுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தங்கத்தோளுக்கினியானில் சுவாமி வீதி உலா, தங்கமசகிரியில் திருமஞ்சனம், தீர்த்த வினியோக கோஷ்டி, சிம்ம மற்றும் சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா மற்றும் கருட சேவையும் நடந்தது.

9-ஆம் திருநாளான நேற்று காலை 8 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ‘கோவிந்தா கோபாலா’ என்ற பக்தி கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரோட்டத்தின்போது சிலம்பம், கரகாட்டம், குச்சுப்பிடி, பொய்க்கால் குதிரை நிகழ்ச்சிகள் நடந்தது. பெருமாள்-தாயார் போன்று வேடமிட்ட இருவர் நடனமாடிச் சென்று பக்தர்களை கவர்ந்தனர்.

தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையத்தை அடைந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்ட நிகழ்ச்சியில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் வள்ளிமுத்து, சண்முகசுந்தரம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், பேரூராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர். இரவு 9 மணிக்கு பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் வீதி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.


Next Story