மோட்டார் சைக்கிள் விபத்தில் மெக்கானிக், சலூன் கடைக்காரர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் மெக்கானிக், சலூன் கடைக்காரர் பலி
x
தினத்தந்தி 29 April 2022 9:17 PM IST (Updated: 29 April 2022 9:17 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி மெக்கானிக், சலூன் கடைக்காரர் பலியாகினர்.

கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்தவர் வாசு மகன் மதிவாணன் (வயது 22). மெக்கானிக்கான இவர் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் பாரதி நகரைச் சேர்ந்த நடராஜன் மகன் நாகராஜ் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டியில் இருந்து கழுகுமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை மதிவாணன் ஓட்டினார்.

கழுகுமலை சாலையில் சங்கரலிங்கபுரம் பாலம் அருகே சென்றபோது, அங்கு நடந்து சென்று கொண்டிருந்த தென்காசி மாவட்டம் குருவிகுளம் கே.புதூரைச் சேர்ந்த தங்கவேல் (52) என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மதிவாணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் தங்கவேல், நாகராஜ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்து, சப்-இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, தங்கவேல், நாகராஜ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கவேல் பரிதாபமாக இறந்தார். நாகராஜூக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த தங்கவேல் கே.புதூரில் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு குருவம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். மோட்டார் சைக்கிள் விபத்தில் மெக்கானிக், சலூன் கடைக்காரர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story