ஆண்டிப்பட்டி, வைகை அணை பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு தொண்டர்கள் திரண்டனர்


ஆண்டிப்பட்டி, வைகை அணை பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு  தொண்டர்கள் திரண்டனர்
x
தினத்தந்தி 29 April 2022 4:25 PM GMT (Updated: 29 April 2022 4:25 PM GMT)

ஆண்டிப்பட்டி மற்றும் வைகை அணை பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தேனி:

மு.க.ஸ்டாலின் வருகை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா தேனியில் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் மதுரை வந்தார். மதுரையில் இருந்து காரில் புறப்பட்டு ஆண்டிப்பட்டி வழியாக வைகை அணை பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு இன்று இரவு வந்தார்.
முன்னதாக இரவு 7 மணியளவில் தேனி மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதற்காக மாலை 4 மணியில் இருந்தே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.

ஆண்டிப்பட்டி பஸ் நிலையம்

பின்னர் ஆண்டிப்பட்டி பஸ் நிலையத்திலும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று அவரை உற்சாகமாக வரவேற்றனர். அதுபோல் வைகை அணை பகுதியிலும் தொண்டர்கள் திரளாக கூடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன், தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story