சிறுவர்களை துன்புறுத்தியதாக புகார்: காப்பக நிர்வாகி அதிரடி கைது


சிறுவர்களை துன்புறுத்தியதாக புகார்: காப்பக நிர்வாகி அதிரடி கைது
x
தினத்தந்தி 29 April 2022 10:04 PM IST (Updated: 29 April 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே சிறுவர்களை துன்புறுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் காப்பக நிர்வாகி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சாத்தான்குளம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுரத்தில் தனியார் சிறுவர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 15-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் காப்பகத்தில் உள்ள சிறுவர்களை அதன் நிர்வாகிகள் வேலை செய்யுமாறு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தங்களது பெற்றோர்கள் மூலம் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். 

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் ஆனந்தபுரத்தில் செயல்படும் சிறுவர் காப்பகத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதில் அரசின் உரிய அனுமதி இன்றி சிறுவர் காப்பகம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் காப்பக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சாத்தான்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சிறுவர் காப்பக நிர்வாகிகளான ஆனந்தபுரத்தை சேர்ந்த தாம்சன் தேவசகாயம் (வயது 49), அவருைடய மனைவி ஷீலா (45) ஆகியோர் மீது சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்தார்.

அவர்களில் தாம்சன் தேவசகாயத்தை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் காப்பகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அந்த காப்பகத்தில் தங்கியிருந்த சிறுவர்-சிறுமிகள் அருகில் உள்ள மற்றொரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். சிறுவர்களை வேலை செய்யுமாறு கூறி துன்புறுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் காப்பக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Next Story