ஊர்காவல் படை பெண் காவலர் தீக்குளிக்க முயற்சி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் ஊர்காவல் படை பெண் காவலர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பாலகிருஷ்ணன் நகரில் வசித்து வருபவர் நெல்சன் மனைவி கவுசல்யா (வயது 42). இவர் விழுப்புரத்தில் ஊர்காவல் படையில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென, தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை திறந்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதைபார்த்த போலீசார், விரைந்து சென்று கவுசல்யாவை தடுத்து நிறுத்தி அவர் வைத்திருந்த மண்எண்ணெய் கேன், தீப்பெட்டியை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர் கூறுகையில், எனது கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். நான் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.
இந்த சூழலில் எனது அக்காளின் கணவரான தோமாயி என்பவர் என்னிடம் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவ்வப்போது வீடு புகுந்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி வருகிறார்.
இதுபற்றி நான் விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தற்கொலை மு டிவுக்கு வந்ததாக தெரிவித்தார். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்று அவரிடம் எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story