மாணவி பரிதாபமாக இறந்தார்


மாணவி பரிதாபமாக இறந்தார்
x

மாணவி பரிதாபமாக இறந்தார்

பொங்கலூர், 
பொங்கலூர் அருகே அரசு பள்ளியில் திடீரென மயங்கி விழுந்த 7-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார்.
அரசுப் பள்ளி
திருப்பூர் பொங்கலூர் அருகே உள்ள அம்மாபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). இவர் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் நிதர்சனா (13). பொங்கலூர் அருகே காட்டூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு பஸ் மூலம் சென்ற நிதர்சனா பள்ளியில் நடந்த இறைவணக்கத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் பள்ளி வகுப்பறையில் வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார். இதைப் பார்த்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை ஆட்டோவில் ஏற்றி பொங்கலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
பரிதாப சாவு
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவரது பெற்றோர் பல்லடத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நிதர்சனாவை கொண்டு சென்றனர். 
அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாணவி இறந்தது குறித்து வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக மாணவியின் உடலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மாணவி நிதர்சனா காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றதாகவும், அங்கு வாந்தி எடுத்து மயக்கம் அடைந்து இறந்துபோனது ஏன் என்று தெரியவில்லை என்றும் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
7-ம் வகுப்பு படிக்கும் மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பொங்கலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவி இறந்ததையடுத்து பள்ளிக்கு மதியத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டது.

Next Story