காளப்பநாயக்கன்பட்டியில் மின்கம்பியில் லாரி மோதி 3 டன் வைக்கோல் எரிந்து நாசம்


காளப்பநாயக்கன்பட்டியில் மின்கம்பியில் லாரி மோதி 3 டன் வைக்கோல் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 29 April 2022 10:47 PM IST (Updated: 29 April 2022 10:47 PM IST)
t-max-icont-min-icon

காளப்பநாயக்கன்பட்டியில் மின்கம்பியில் லாரி மோதி 3 டன் வைக்கோல் எரிந்து நாசம்

சேந்தமங்கலம்:
காளப்பநாயக்கன்பட்டியில் மின்கம்பியில் லாரி மோதியதில் 3 டன் வைக்கோல் போர் எரிந்து நாசமானது.
மின்கம்பத்தில் லாரி மோதல்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டியில் ரெட்டி காலனி உள்ளது. இங்கு நேற்று மதியம் 2 மணி அளவில் ஒரு லாரி சுமார் 4 டன் வைக்கோல் பாரத்தை ஏற்றிக்கொண்டு விற்பனைக்காக வந்தது. இந்த லாரியை சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம் புதூரை சேர்ந்த செல்வம் என்பவர் ஓட்டி வந்தார்.
 அப்போது ரெட்டி காலனியில் உள்ள ஒரு மின்கம்பத்தில் எதிர்பாராதவிதமாக லாரி மோதியது. இதில் அந்த மின்கம்பம் ஒடிந்து லாரி மீது விழுந்தது. இதனால் மின்வயர்கள் வைக்கோல் பாரத்தில் பட்டு தீப்பிடித்து எரிய தொடங்கியது. 
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பினார். அப்போது லாரியில் இருந்த வைக்கோல் போர் குபுகுபுவென தீ பிடித்து எரிந்ததால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த சம்பவம் குறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். 
விசாரணை
அதன்பேரில் அங்கிருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீப்பிடித்த வைக்கோல் போர்களை கீழே அகற்றி அதில் தண்ணீரை பீச்சியடித்து அணைத்தனர். எனினும் லாரியில் இருந்த சுமார் 3 டன் வைக்கோல் போர் எரிந்து நாசமானது. அத்துடன் லாரியில் இருந்த பலகைகள் சேதம் அடைந்தது. 
இதுகுறித்து தகவலறிந்த சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story