பொற்கொடியம்மன் கோவில் ஏரித் திருவிழாவுக்கு வண்டிகள், வாகனங்களில் வர அனுமதி இல்லை


பொற்கொடியம்மன் கோவில் ஏரித் திருவிழாவுக்கு வண்டிகள், வாகனங்களில் வர அனுமதி இல்லை
x
தினத்தந்தி 29 April 2022 10:50 PM IST (Updated: 29 April 2022 10:50 PM IST)
t-max-icont-min-icon

வல்லண்டராமம் பொற்கொடியம்மன் கோவில் ஏரித்திருவிழாவுக்கு மாட்டு வண்டிகள் மற்றும் வாகனங்களில் வர அனுமதியில்லை என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அணைக்கட்டு

வல்லண்டராமம் பொற்கொடியம்மன் கோவில் ஏரித்திருவிழாவுக்கு மாட்டு வண்டிகள் மற்றும் வாகனங்களில் வர அனுமதியில்லை என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வல்லண்டராமம் கிராமத்தில் பொற்கொடியம்மன் கோவில் ஏரித் திருவிழா அண்ணாச்சி பாளையம், வேலங்காடு, பனங்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களால் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடத்தப்படவில்லை. இந்த ஆண்டுக்கான ஏரித்திருவிழா வருகிற 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதைமுன்னிட்டு ஏரித்திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று மாலை வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார்.

 அணைக்கட்டு தாசில்தார் விநாயகமூர்த்தி, வல்லண்டராமம் முக்கிய பிரமுகர்கள் வில்வநாதன், வெங்கடேசன், முருகேசன், அண்ணாச்சி பாளையம் தட்சணாமூர்த்தி, ஜி.சீனிவாசன், சாமி கவுண்டர், வேலங்காடு கங்காதரன், சீனிவாசன், பொற்கொடியான், பனங்காடு ராஜவேல் இளஞ்செழியன் குணசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொற்கொடி அம்மன் கோவில் செயல் அலுவலர் சசிகுமார் வரவேற்று பேசினார்.

ஆடு, கோழி பலியிட தடை

10-தேதி இரவு 12 மணிக்கு அம்மன் புஷ்ப ரதத்தில் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்ற உடன், வல்லண்டராமம் கிராமத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். 11-ந் தேதி காலை 5.30 மணி வரை நடத்திவிட்டு 6 மணிக்கு புஷ்பரதத்தை அண்ணாச்சி பாளையம் கிராமத்தில் ஒப்படைத்துவிட வேண்டும். ஆடுகள் மற்றும் கோழிகளை கோவில் முன்பு உள்ள தென்னந்தோப்பில் பலியிட வேண்டும். புஷ்பரதத்தின் முன்பு ஆடு, கோழிகளை பலியிட அனுமதி இல்லை. புஷ்ப ரதம் செல்லும் சாலைகளில் தாழ்வாக உள்ள மின் வயர்களை அப்புறப்படுத்த வேண்டும்.

சுகாதார வசதி, முதலுதவி சிகிச்சை முகாம், 108 ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும், பக்தர்களுக்கு தங்குதடையின்றி  குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் ஆங்காங்கே குடிநீர்  அமைக்க வேண்டும். இரண்டு ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார்களை பழுது பார்க்க வேண்டும். ஏரியில் தண்ணீர்  உள்ளதால் புஷ்பரதம் வண்டி பாட்டை வழியாக செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வாகனங்களுக்கு அனுமதியில்லை

இந்த ஆண்டு பக்தர்கள் அதிக அளவில் கூட இருப்பதாலும், ஆங்காங்கே ஏரியில் தண்ணீரில் உள்ளதாலும் மாட்டு வண்டிகளிலும், வாகனங்கள் வரவும் இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் கோவிலுக்கு வெளியே போலீசார் அறிவுறுத்தும் இடங்களில் நிறுத்த வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போக்குவரத்து, வருவாய், சுகாதாரம், தீயணைப்பு உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்திற்கு முன்னதாக வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார், கோவில் நிர்வாகிகள் கோவிலுக்குச் சென்று பார்வையிட்டனர். அப்போது ஏரி நிறைய தண்ணீர் உள்ளதால் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் குளத்தில் இறங்கி குளிக்க வேண்டாம் என ஆங்காங்கே பதாகைகள் வைக்க வருவாய் கோட்டாட்சியர்  அறிவுறுத்தினார். மேலும் அந்தப் பகுதிகளில் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.முடிவில் கோவில் கணக்கர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Next Story