ஆவாரங்காடு அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்-1 மாணவி தற்கொலை முயற்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை
ஆவாரங்காடு அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்-1 மாணவி தற்கொலை முயற்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் ஆவாரங்காடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மாணவி தற்கொலைக்கு முயன்றார். அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிளஸ்-1 மாணவி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவி படித்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த மாணவிக்கு கடந்த சில மாதங்களாக உடல் மற்றும் மனதளவில் மாற்றங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் பள்ளிக்கு வரும் அந்த மாணவியிடம் மற்ற மாணவிகள் சரியாக பேசுவது இல்லை என கூறப்படுகிறது. மேலும் சில மாணவிகள் அந்த மாணவியை ஒதுக்கி வைத்து பார்ப்பதாக ெசால்லப்படுகிறது. இதனால் மாணவி கடந்த சில தினங்களாக விரக்தியில் இருந்தாராம்.
கவுன்சிலிங்
இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவி மாலை 3 மணிக்கு பள்ளியின் மேல்மாடிக்கு சென்றார். அப்போது வகுப்பறையில் மாணவி இல்லாததை அறிந்த மற்ற மாணவிகள் அவரை தேடினர். பின்னர் மாடி பகுதிக்கு சென்றனர். அங்கு அந்த மாணவி மாடியில் இருந்து தற்கொலைக்காக குதிக்க முயன்றதை பார்த்த மாணவிகள் அவரிடம் பேசினர். இந்த தகவல் பள்ளிக்கூடத்தில் காட்டுத்தீயாக பரவியது. இதையடுத்து மாணவிகள் பள்ளி வளாகத்தில் திரண்டு அந்த மாணவியை கீழே இறங்கி வருமாறு கூறி கதறினர். மேலும் இதுகுறித்து அறிந்து பொதுமக்களும் அங்கு திரண்டனர்.
பின்னர் மாணவிகள் பேசி அந்த மாணவியை கீழே அழைத்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து பள்ளிக்கூடத்துக்கு திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், கூடுதல் துணை சூப்பிரண்டு செல்லபாண்டியன், மாவட்ட கல்வி அதிகாரி விஜயலட்சுமி ஆகியோர் வந்தனர். அவர்கள் அந்த மாணவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் அந்த மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்து மாணவியின் பெற்றோரை வரவழைத்து ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் பள்ளிக்கூடத்தில் நேற்று பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story