சீர்காழி அருகே அரசு பஸ் கவிழ்ந்து 17 பேர் காயம்


சீர்காழி அருகே அரசு பஸ் கவிழ்ந்து 17 பேர் காயம்
x
தினத்தந்தி 29 April 2022 11:01 PM IST (Updated: 29 April 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே அரசு பஸ் கவிழ்ந்து 17 பேர் காயம் அடைந்தனர்.

சீர்காழி
காரைக்காலில் இருந்து சீர்காழி வழியாக புதுச்சேரிக்கு 65 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு அரசு பஸ் சென்றது. சீர்காழி அருகே காரைமேடு என்ற இடத்தில் சென்ற போது எதிரே வந்த வாகனத்திற்கு பஸ் டிரைவர் வழிவிட முயன்ற போது எதிர்பாராதவிதமாக பஸ் கவிழ்ந்தது. 
இந்த விபத்தில்  பஸ் டிரைவர் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் மேலப்பாதி கிராமத்தை சேர்ந்த அன்பரசன் (வயது 56), பஸ் கண்டக்டர் திருக்கடையூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (37), சிதம்பரம் கனகசபை நகரை சேர்ந்த வெங்கட்ராமன் (38), காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி கலைப்பொன்னி (32) உள்பட 17 பேர் காயம் அடைந்தனர். 
கலெக்டர் ஆறுதல்
காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மற்றும் சீர்காழி தீயணைப்பு நிலைய வாகனம் மூலம்  சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து வெங்கட்ராமன், கலைப்பொன்னி ஆகிய 2 பேரையும் மேல்சிகிச்சைக்காக  சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, உதவி கலெக்டர் நாராயணன், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அவர்கள்  சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்
போக்குவரத்து பாதிப்பு
இதுதொடர்பாக வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சீர்காழி- நாகப்பட்டினம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story