தர்மபுரியில் 11 நாட்கள் புத்தக திருவிழா நடத்த முடிவு ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல்
தர்மபுரியில் 11 நாட்கள் புத்தக திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்தார்.
தர்மபுரி:
தர்மபுரியில் 11 நாட்கள் புத்தக திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
தர்மபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகியவை இணைந்து புத்தக திருவிழா நடத்துவது குறித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர் சித்ரா விஜயன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை, முதன்மைகல்வி அலுவலர் குணசேகரன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி பேசியதாவது:-
தர்மபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து இந்த ஆண்டு தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வருகிற 24.6.2022 முதல் 4.7.2022 வரை 11 நாட்களுக்கு புத்தக திருவிழாவை சிறப்பான முறையில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த புத்தக திருவிழாவினை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்.
கைபேசியை விடு
தர்மபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள புத்தக திருவிழா “கைபேசியை விடு, புத்தகத்தை எடு” என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடத்தப்படுகின்றது. இதில் தமிழகத்தின் முன்னணி பதிப்பாளர்கள், நூல் விற்பனையாளர்கள் பங்கேற்று இலக்கியம், வரலாறு, மானுடவியல், அரசியல், சூழலியல், நலவாழ்வு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பற்றிய புத்தகங்களும், சிறுவர்களுக்கான நூல்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வேண்டிய நூல்களும், போட்டி தேர்வுகளுக்கான நூல்களையும் இடம்பெற செய்ய உள்ளனர்.
இந்த புத்தக திருவிழாவில் தினமும் பகல் நேரத்தில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகள் நடத்தும் கலந்துரையாடல்களும், இலக்கிய கூட்டங்களும் நடைபெறும். மாணவ, மாணவிகள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. தினமும் மாலை 6 மணியில் இருந்து 8 மணி வரை சொற்பொழிவு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், தாசில்தார் ராஜராஜன், மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி, தகடூர் புத்தக பேரவை செயலாளர் டாக்டர் செந்தில், தலைவர் சிசுபாலன், பொருளாளர் கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, பொறுப்பாளர் வசந்தி, பாரதி புத்தகாலயம் நிர்வாகி அறிவுடைநம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story