தேன்கனிக்கோட்டை அருகே பள்ளி மாணவியிடம் சில்மிஷம்; தலைமை ஆசிரியர் அதிரடி கைது பணி இடைநீக்கம் செய்து கல்வி அதிகாரி உத்தரவு
தேன்கனிக்கோட்டை அருகே பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி உத்தரவிட்டார்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி உத்தரவிட்டார்.
மாணவியிடம் சில்மிஷம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் வசித்து வருபவர் லாரன்ஸ். (வயது 48). இவர் அஞ்செட்டி அருகேயுள்ள கெம்பகரை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் மொத்தம் 102 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் லாரன்ஸ் உள்பட 4 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் தலைமை ஆசிரியர் லாரன்ஸ் மட்டும் பள்ளிக்கு சென்றுள்ளார். மற்ற 3 ஆசிரியர்களும் பணி நிமித்தமாக கிருஷ்ணகிரி சென்று விட்டனர். பள்ளிக்கு சென்ற தலைமை ஆசிரியர் லாரன்ஸ், அப்பள்ளியில் படித்து வரும் 7-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பணி இடைநீக்கம்
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் மாணவியின் உறவினர்கள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரை தாக்கி, கார் கண்ணாடியை உடைத்தனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பூர்ணம் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் லாரன்சை அதிரடியாக கைது செய்தார்.
இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் அன்பழகன் பள்ளிக்கு நேரில் சென்று பெற்றோர் மற்றும் மாணவியிடம் விசாரணை நடத்தினார். இதுகுறித்த அறிக்கையை அவர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து தலைமை ஆசிரியர் லாரன்சை பணி இடைநீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story