மாட்டுவண்டியில் சொந்த ஊர் புறப்பட்ட பக்தர்கள்
வைத்தீஸ்வரன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு மாட்டு வண்டியில் பக்தர்கள் சொந்த ஊர் புறப்பட்டனர்.
சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்வ முத்துக்குமாரசாமி, அங்காரகன் (செவ்வாய்), தன்வந்திரி ஆகியோர் தனித்தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
மேலும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நகரத்தார்கள் ஆண்டுதோறும் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையன்று பாத யாத்திரையாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
நேர்த்திக்கடன்
ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கோவிலுக்கு பாதயாத்திரை வர பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளதால் கோவிலுக்கு பக்தர்கள் வர அனுமதிக்கப்பட்டனர்.அந்தவகையில், இந்த ஆண்டு கடந்த செவ்வாய்க்கிழமையன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து நகரத்தார்கள் மாட்டு வண்டியில் சீர்வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு பாதயாத்திரையாக கோவிலில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர், கோவில் பகுதியில் தங்கி ஓய்வெடுத்த நகரத்தார்கள் அனைவரும் மாட்டு வண்டியில் நேற்று சொந்த ஊர் புறப்பட்டனர். தற்போது நவீன வசதிகளுடன் வாகனங்கள் வந்து விட்டநிலையில் நகரத்தார் மாட்டு வண்டிகளில் அணிவகுத்து சென்றது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது.
Related Tags :
Next Story