ராணிப்பேட்டை மாவட்டத்தில் இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த நாளை முதல் தடை


ராணிப்பேட்டை மாவட்டத்தில் இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த நாளை முதல் தடை
x
தினத்தந்தி 29 April 2022 6:15 PM GMT (Updated: 2022-04-29T23:45:20+05:30)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தடை செய்யப்படுவதாக கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தடை செய்யப்படுவதாக கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாளை முதல் தடை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்த்து பிளாஸ்டிக் இல்லா மாவட்டம் என்ற நிலையை அடைய ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளில் அனைத்து தெரு ஓரங்களில் இறைச்சி கடைகள் வைத்து விற்பனை செய்யும் இறைச்சி விற்பனை கடைக்காரர்கள் பொதுமக்களுக்கு இறைச்சிகளை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக்குகள், பிளாஸ்டிக் பேப்பர்களில் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இது நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தடை செய்யப்படுகிறது. எனவே அனைத்து வகையான இறைச்சி கடை உரிமையாளர்கள், கிராமம் மற்றும் நகரப்பகுதிகளில் உள்ளவர்கள் முழுமையாக பிளாஸ்டிக்கை தவிர்த்து அதற்கு மாற்று பொருளான வாழை இலை, மந்தாரை இலை மற்றும் பாத்திரங்களில் வழங்க வேண்டும். 

நடவடிக்கை

இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடை வைத்து வியாபாரம் செய்வதும் முற்றிலும் தடை செய்யப்படும். அதேபோல இறைச்சிகளை வாங்க வரும் பொது மக்கள் கட்டாயமாக வீட்டிலிருந்து அதற்கான பாத்திரங்களை கொண்டு வந்து இறைச்சிகளை வாங்கிச்செல்ல வேண்டும். 

இதனை நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கண்காணித்து இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Next Story