முதல் நாளே செயல்படாத ஒளி-ஒலி காட்சிக்கூடம்
பாம்பன் விவேகானந்தர் மணிமண்டபத்தில் ரூ.5½ கோடியில் அமைக்கப்பட்ட ஒளி-ஒலி காட்சிக்கூடம் முதல்நாளே செயல்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ராமேசுவரம்,
பாம்பன் விவேகானந்தர் மணிமண்டபத்தில் ரூ.5½ கோடியில் அமைக்கப்பட்ட ஒளி-ஒலி காட்சிக்கூடம் முதல்நாளே செயல்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
விவேகானந்தர் மணிமண்டபம்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அக்காள் மடம் சாலையில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் குந்துகால் கடற்கரை உள்ளது. இங்கு விவேகானந்தர் மணிமண்டப கட்டிடம் அமைந்துள்ளது.
கடந்த 1897-ஆம் ஆண்டு அமெரிக்காவில் சிகாகோவில் நடந்த சர்வ சமய மாநாட்டில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு இந்தியாவின் பெருமைகள் குறித்து சிறப்புரை ஆற்றி விட்டு சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் முதல் இடமாக தமிழகத்தின் பாம்பன் குந்துகால் கடற்கரையில் வந்து இறங்கினார். குந்துகால் கடற்கரையில் படகு மூலம் வந்திறங்கிய சுவாமி விவேகானந்தரை ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி குத்துக்காலிட்டு வரவேற்றதால் இன்று வரையிலும் அந்த கடற்கரை குந்துகால் கடற்கரை என்றே அழைக்கப்பட்டு வருகின்றது.
அதுபோல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் நினைவாக குந்துகால் கடற்கரையில் விவேகானந்தர் மணிமண்டப கட்டிடம் ஒன்றும் கட்டப்பட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக திறக்கப்பட்டது. அதுபோல் இந்த மணிமண்டபம் கட்டிடம் ராமகிருஷ்ண தபோவனத்தில் ஒப்படைக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.
ரூ.5½ கோடியில்...
இந்த விவேகானந்தர் மணிமண்டப கட்டிடத்தில் விவேகானந்தர் மற்றும் மன்னர் பாஸ்கர சேதுபதி ஆகியோர் நிற்பது போன்ற முழு உருவச்சிலை, தியான அறை மற்றும் விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு அடங்கிய பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தநிலையில் இந்த விவேகானந்தர் மணிமண்டப கட்டிடத்தில் மத்திய அரசின் சுதேஷ்தர்சன் திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறை மூலம் ரூ.5 கோடியே 69 லட்சம் நிதியில் ஒலி-ஒளி காட்சி கூடம் அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த பணிகள் முழுமையாக முடிவடைந்து கடந்த ஆண்டு இந்த ஒலி-ஒளி காட்சி கூடமானது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் சுற்றுலாத்துறை மூலம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து விவேகானந்தர் மணிமண்டப கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒலி-ஒளி காட்சி கூடம் நேற்று முன்தினம் இரவு திறந்து ஒலி-ஒளி காட்சிக்கூடத்தை திரையிட தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
முதல்நாளே செயல்படவில்லை
விவேகானந்தர் மணிமண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலி-ஒளி காட்சி கூடத்தை இரவு 7 மணிக்கு திரையிட முயற்சி செய்தனர். ஆனால் ஒளி ஒலி காட்சி கூடத்தில் ஒரே ஒரு மின் விளக்கு மட்டுமே தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததுடன் மணிமண்டப கட்டிடத்தில் விளக்கு வெளிச்சமும் மாறாததுடன் எந்த ஒரு ஆடியோ சத்தமும் வராமலே இருந்தது. ஒலி- ஒளிவழி காட்சிக் கூடத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 மணி நேரம் போராடியும் சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் முயற்சி தோல்வியடைந்தது. இதனால் ஒலி-ஒளி காட்சிகளை பார்க்க சென்ற சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த தொழில்நுட்ப கோளாறு ஓரிரு நாட்களில் சரி செய்யப்பட்டு மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story