லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கரூர்,
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர்
கரூர் மாவட்டம், நஞ்சை கடம்பங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் வசந்தி (வயது 45). இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் தென்னிலை தெற்கு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய போது கூட்டுப்பட்டாவை பிரித்து தனிப்பட்டா கேட்ட விஜயலட்சுமியிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வசந்தியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து வசந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் வசந்தி மீண்டும் பணியில் சேர்ந்தார்.
3 ஆண்டுகள் சிறை
இந்த நிலையில் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கில் சிறப்பு நீதிபதி ராஜலிங்கம் நேற்று தீர்ப்பு அளித்தார். இதில் அரசு ஊழியர் லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக 3 ஆண்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒராண்டு சிறை தண்டனையும், அரசு ஊழியராக பணியாற்றுபவர் தனது கடமையை செய்வதற்கு லஞ்சம் பெற்றதற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒராண்டு சிறை தண்டனையும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ஏககாலத்தில் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் வசந்தி 3 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிப்பார்.
Related Tags :
Next Story