சிவன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
நெல்லை தச்சநல்லூர் சிவன் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் சிவன் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவன் கோவில்
நெல்லை தச்சநல்லூரில் சிவன்கோவில் என அழைக்கப்படும் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்ததையொட்டி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்குகியது.
கொடியேற்றம்
முன்னதாக அதிகாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. 6 மணிக்கு மேளதாளம் முழங்க கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள், பக்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இரவு 9 மணிக்கு சுவாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் சப்பரத்தில் வீதி உலா நடந்தது. விழா நாட்களில் காலையில் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலாவும் நடக்கிறது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந்தேதி நடக்கிறது. காலை 6.50 மணிக்கு வருசாபிஷேகமும், காலை 10.43 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளி தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடக்கிறது.
Related Tags :
Next Story