கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரண தொகை கோரி அறிக்கை
கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரண தொகை கோரி அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் தனபதி, கூறுகையில் ‘‘மாவட்டத்தில் கோடை அறுவடை தொடங்கியுள்ளது. கடந்த 1-ந் தேதி முதல் மூடப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்க வேண்டும். இடைத்தரகர்கள் இன்றி உரிய கட்டணத்துடன் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிலுவையில் உள்ள மின் இணைப்புகளை விரைந்து வழங்கிய பின் புதிய திட்டத்தை தொடங்க வேண்டும். மும்முனை மின்சாரம் தற்போது 3 மணிநேரம் மட்டுமே வழங்கப்படுகிறது. குறைந்தது 6 மணி நேரமாவது மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும்’’ என்றார்.
செழியன் பேசுகையில், ‘‘பயிர் சேதத்துக்கு இழப்பீடு வராமல் உள்ளது. பல மாதங்கள் கடந்தும் விவசாயிகள் அடுத்த சாகுபடிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். விரைவில் இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும்’’ என்றார். சுசீந்திரன் பேசுகையில், ‘‘பயிர்க்காப்பீடு பெற்றவர்களுக்கான இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. அந்த தொகைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். திடீரென மழை பெய்தால் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து விடுகிறது. மழையில் நெல் முளைத்து விடுகிறது. அதனைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும்’’ என்றார். கூட்டத்தில் கலெக்டர் கவிதாராமு கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட 1,296.76 எக்டேர் நெல், உளுந்து, மக்காச்சோளம் மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு 3,002 விவசாயிகளுக்கு ரூ.82 லட்சத்து 78 ஆயிரத்து 570 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 30-ந் தேதி முதல் ஜனவரி 2-ந் தேதி வரை பெய்த கனமழையால் பாதிப்படைந்த 1,339.705 எக்டர் நெல், உளுந்து மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கும், பிப்ரவரி மாதத்தில் பெய்த கனமழையால் பாதிப்படைந்த 492 எக்டேர் நெற் பயிர்களுக்கும், நிவாரணத் தொகை வேண்டி சென்னை வேளாண்மை இயக்குனர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
Related Tags :
Next Story