நகை வாங்குவதுபோல் நடித்து 11 பவுன் தங்க கட்டி திருட்டு
நகை வாங்குவது போல் நடித்து 11 பவுன் தங்க கட்டி திருடிய 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அழகப்பபுரத்தை சேர்ந்தவர் மெய்கண்ட மூர்த்தி (வயது 45). இவர் திசையன்விளை மெயின் பஜாரில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இவர் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். கடையில் ஊழியர் கதிரேசன் என்பவர் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் கடைக்கு வந்தனர். அங்கிருந்த கதிரேசனிடம் புதிதாக கட்டி வரும் வீட்டின் நிலைக்கதவுக்கு கீழ் வைப்பதற்கு தகடு வடிவில் தங்கம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். உடனே கதிரேசன் தங்கத்தை எடுத்து கொடுத்து அதற்கான பணத்தை பெற்றுள்ளார்.
இதன்பின்னர் மீண்டும் அதேபோல் தங்கம் வேண்டும் என கேட்டுள்ளனர். அப்போது கதிரேசனின் கவனத்தை திசைதிருப்பி கடையில் ஒரு டப்பாவில் வைத்திருந்த 11 பவுன் எடையுள்ள தங்க கட்டியை திருடிக்கொண்டு அங்கிருந்து 2 பேரும் சென்று விட்டனர்.நேற்று மாலையில் மெய்கண்ட மூர்த்தி கடைக்கு வந்தார். பின்னர் புதிதாக நகை செய்வதற்கு டப்பாவில் வைத்து இருந்த தங்க கட்டியை தேடினார். ஆனால் தங்க கட்டி அதில் இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பார்த்தபோது, அது திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இந்த துணிகர சம்பவம் குறித்து திசையன்விளை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் ஜமால், சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் ஆகியோர் கடைக்கு சென்றனர். கடை மற்றும் பஜார் பகுதியில் பொருத்தி இருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் அந்த 2 பேரும் நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story