சென்னிமலையில் லாரி கவிழ்ந்து விபத்து
சென்னிமலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மற்றொரு இடத்தில் சரக்கு வேன் கவிழ்ந்தது.
சென்னிமலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மற்றொரு இடத்தில் சரக்கு வேன் கவிழ்ந்தது.
லாரி கவிழ்ந்தது
கர்நாடக மாநிலத்தில் இருந்து கொப்பரை தேங்காய் பாரம் ஏற்றிய லாரி ஒன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. லாரியை சத்தியமங்கலத்தை சேர்ந்த துரைசாமி (வயது 62) என்பவர் ஓட்டினார்.
லாரி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள வடக்கு ராஜ வீதி வழியாக கிழக்கு ராஜ வீதிக்கு அங்குள்ள வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தேர் தப்பியது
இந்த விபத்தில் லாரியில் இருந்த கொப்பரை தேங்காய் மூட்டைகள் ரோட்டில் சிதறின. மேலும் இந்த விபத்தில் லாரி டிரைவர் துரைசாமி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். லாரி கவிழ்ந்த இடத்தில் இருந்து சில அடி தூரத்தில் தான் சென்னிமலை முருகன் கோவிலின் பங்குனி தேர் நிறுத்தப்பட்டு உள்ளது. நல்லவேளையாக இந்த விபத்தில் பங்குனி தேர் தப்பியது.
10-க்கும் மேற்பட்ட...
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதேபோல் ஒரு லாரி தேரை உரசியபடி கவிழ்ந்ததால் தேர் கொட்டகை சேதமடைந்தது. இதுவரை இந்த இடத்தில் 10-க்கும் மேற்பட்ட லாரிகள் கவிழ்ந்துள்ளது. வளைவில் திரும்புவதற்கு முன் லாரியின் வேகத்தை குறைப்பதற்காக சென்னிமலை போலீஸ் நிலையம் முன்பு தடுப்பு வைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் அதையும் மீறி லாரிகள் வேகமாக வந்து வளைவில் திரும்பும் போது கவிழ்ந்து விடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
சரக்கு வேன் கவிழ்ந்தது
இந்தநிலையில் சென்னிமலை அருகே நூல் பண்டல்கள் ஏற்றிய சரக்கு வேன் ஒன்று கவிழ்ந்தது. அதன் விவரம் வருமாறு:-
சென்னிமலையில் இருந்து நூல் பண்டல்கள் ஏற்றிய சரக்கு வேன் ஒன்று நேற்று பெருந்துறை ஆர்.எஸ்.ரோடு வழியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்துக்கு சென்று கொண்டு இருந்தது. இந்த வேன் சென்னிமலையை அடுத்த கோரக்காட்டு வலசு அருகில் சென்றபோது திடீரென டயர் பஞ்சர் ஆனது. இதில் நிலை தடுமாறிய வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக விபத்துக்குள்ளான சரக்கு வேனில் இருந்த நூல் பண்டங்களை வேறு வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது.
Related Tags :
Next Story