சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு: பா.ஜனதா பெண் பிரமுகர் கைது - மறுதேர்வு நடத்துவதாக கர்நாடக அரசு அறிவிப்பு


சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு: பா.ஜனதா பெண் பிரமுகர் கைது - மறுதேர்வு நடத்துவதாக கர்நாடக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 30 April 2022 4:36 AM IST (Updated: 30 April 2022 4:36 AM IST)
t-max-icont-min-icon

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் புனேயில் தலைமறைவாக இருந்த பா.ஜனதா பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு:

சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு

  கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் நடந்திருந்தது. இதற்கான முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, தேர்வில் வெற்றி பெற்றவர்களில் கலபுரகி மாவட்டத்தில் பா.ஜனதா பிரமுகரான திவ்யா காகரகிக்கு சொந்தமான பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த மையத்தில் வைத்து தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தது தெரியவந்தது.

  இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து சி.ஐ.டி. விசாரணை நடத்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். அதன்பேரில், விசாரணை நடத்தி வரும் சி.ஐ.டி. போலீசார், காங்கிரஸ் பிரமுகர்கள், போலீஸ்காரர்கள், நகரசபை பெண் அதிகாரி உள்பட 17 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பெண் பிரமுகர் தலைமறைவு

  கைதானவர்களில் காங்கிரஸ் பிரமுகர்களும், சகோதரர்களுமான மகாந்தேஷ் பட்டீல், ருத்ரேகவுடா பட்டீல் ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர் தோ்வு எழுதியவர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் வரை வாங்கியது தெரியவந்தது. அதே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் பா.ஜனதா பிரமுகரான திவ்யா மூளையாக செயல்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதுதவிர கலபுரகி நீர்ப்பாசனத்துறை என்ஜினீயர் மஞ்சுநாத்தும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

  இதையடுத்து, திவ்யா, மஞ்சுநாத் உள்ளிட்டோரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம் வெளியானதில் இருந்து திவ்யா தலைமறைவாகி விட்டார். மேலும் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கலபுரகி கோா்ட்டில் முன்ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருந்தது.

புனேயில் கைது

  அதே நேரத்தில் தலைமறைவாக இருக்கும் திவ்யா, மஞ்சுநாத், காசிநாத் உள்பட 6 பேர் போலீசார் முன்பு சரண் அடைய வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பித்தும் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார், திவ்யாவை கைது செய்ய தீவிரம் காட்டினார்கள். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.

  இந்த நிலையில், மராட்டிய மாநிலம் புனேயில் திவ்யா தலைமறைவாக இருப்பது பற்றி சி.ஐ.டி. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார், புனேவுக்கு விரைந்து ெசன்று அங்குள்ள ஓட்டலில் இருந்த திவ்யாவை கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த சுனந்தா, அர்ச்சனா மற்றும் சதாம், சுரேஷ், காளிதாஸ் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்கள் புனேயில் இருந்து கலபுரகிக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

  மருத்துவ பரிசோதனைக்கு பிறகு திவ்யா உள்பட 6 பேரும் கலபுரகி கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சி.ஐ.டி. போலீசார் நீதிபதியிடம் அனுமதி கேட்டனர்.

11 நாட்கள் போலீஸ் காவல்

  இதையடுத்து, திவ்யா உள்ளிட்ட 6 பேரையும் 11 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சி.ஐ.டி. போலீசாருக்கு, நீதிபதி அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து கோர்ட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் திவ்யா அழைத்து செல்லப்பட்டார். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மூளையாக இருந்த திவ்யா சிக்கி இருப்பதால், இதற்கு பின்னணியில் இருக்கும் பலர் சிக்குவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மறுதேர்வு நடத்த முடிவு

  இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை ரத்து செய்துவிட்டு அந்த 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு மறுதேர்வு நடத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  கா்நாடகத்தில் 545 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வு நடைபெற்றது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு தேர்வு எழுதிய 54 ஆயிரத்து 289 பேருக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும்.

அனுமதி வழங்க மாட்டோம்

  ஆனால் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி வழங்க மாட்டோம். மறுதேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். மறுதேர்வு நடத்தப்படுவதால் நேர்மையானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அந்த தேர்வு முறைகேடுகள் மேலும் சில மையங்களிலும் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் மறுதேர்வு நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

  வரும் நாட்களில் இத்தகைய முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க கடுமையான சட்டத்தை கொண்டுவருவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

  இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.

பா.ஜனதா பெண் பிரமுகர் சிக்கியது எப்படி?

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மூளையாக இருந்ததாக கூறப்படும் பா.ஜனதா பெண் பிரமுகர் கடந்த 18 நாட்கள் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். அவரை பற்றிய எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. ஏனெனில் அடிக்கடி இடத்தை மாற்றியபடி இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், நேற்று முன்தினம் கலபுரகி நகரசபை பெண் அதிகாரியான ஜோதியை போலீசார் கைது செய்திருந்தார்கள். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் திவ்யா புனேயில் இருப்பது பற்றிய தகவல் போலீசாருக்கு கிடைத்ததாக தெரிகிறது. உடனே அங்கு சென்ற போலீசாா், திவ்யாவை கைது செய்திருந்தனர்.

திவ்யா, தொழில் அதிபர் சுரேசின் உதவியுடன் புனேயில் தலைமறைவாக இருந்துள்ளார். பின்னர் மராட்டியத்தில் இருந்து குஜராத் சென் அவர், அங்கும் சில நாட்கள் தங்கி இருந்து கோவில்களில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். பின்னர் குஜராத்தில் இருந்து புனேவுக்கு அவர் திரும்பி வந்ததும், இந்த நிலையில் அவர் போலீசில் சிக்கியதும் தெரியவந்தது.

Next Story