தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா


தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா
x
தினத்தந்தி 29 April 2022 11:16 PM GMT (Updated: 2022-04-30T04:46:08+05:30)

தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா நடந்தது.

மலைக்கோட்டை:

தேர்த்திருவிழா
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா வருகிற மே மாதம் 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி 4-ந்தேதி மாலை 5 மணிக்கு உச்சிப்பிள்ளையாருக்கு அபிஷேகமும், மாலை 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தியும் நடக்கிறது. 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் கடக லக்னத்தில் துவஜாரோகணம் (கொடியேற்றம்) நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு கேடயத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
6-ந்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி கற்பகவிருட்சம் வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் புறப்பாடு நடைபெறுகிறது. 7-ந்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி பூத வாகனம், அம்பாள் கமல வாகனத்திலும், 8-ந்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி கைலாசபர்வதம் வாகனம், அம்பாள் அன்னம் வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. 
மருத்துவம் செய்த ஐதீக நிகழ்ச்சி
9-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் சிவபக்தியில் சிறந்த ரத்தினாவதிக்கு சிவபெருமான் அவரது தாயாக (தாயுமானவராய்) எழுந்தருளி மருத்துவம் செய்த ஐதீக நிகழ்ச்சி நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு அறுபத்து மூவர் முதலான பக்தகோடிகள் சூழ சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரத்தினாவதி அம்மையாருக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து 10-ந்தேதி மதியம் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு சுவாமி யானை வாகனம், அம்பாள் முத்துபல்லக்கில் புறப்பாடு நடைபெறும். 11-ந்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி நந்திகேசர் வாகனம், அம்பாள் யாழி வாகனத்திலும், 12-ந்தேதி இரவு 7 மணிக்கு சுவாமி தங்கக்குதிரை வாகனம், அம்பாள் பல்லக்கிலும் வீதி உலா நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு மேல் சுவாமி தேர் நிலையில் வேடுபறி ஐதீகம் நடக்கிறது. இதற்கிடையே மாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு தேர் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.
தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 13-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் மேஷ லக்னத்தில் திருத்தேர் வடம் பிடித்தலுடன் தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் வெள்ளை சாற்றி தேர்க்கால் கண்டு அருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14-ந்தேதி காலை 8 மணிக்கு நடராஜர் புறப்பாடும், 10 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி செல்லுதல் நிகழ்ச்சியும், பகல் 12 மணிக்கு மேல் பிரம்ம தீர்த்தமாகிய தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு மேல் தெப்பக்குளம் கூடப்பள்ளி மண்டபத்தில் இருந்து ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், கொடியிறக்கம் (அவரோஹகனம்) மற்றும் சுவாமி எதாஸ்தானம் சேர்தல், ஆச்சார்ய உற்சவம் ஆகியவை நடைபெறுகிறது.
15-ந்தேதி காலை திருகுறிப்பு தொண்டர் உள்புறப்பாடு, இரவு 7 மணிக்கு சுவாமி தங்கக்குதிரை வாகனம், அம்பாள் பல்லக்கில் எழுந்தருளல், 16-ந்தேதி தாயுமான அடிகள் உற்சவம், மாலை 5 மணிக்கு சிரகிரி தட்சிணாமூர்த்தி சாமிக்கும், உற்சவமூர்த்திகளுக்கும் அபிஷேக, ஆராதனை மற்றும் இரவு 7 மணிக்கு உள் திருமுறை பாராயணத்துடன் ஏகாந்த சேவை, சுவாமி அம்பாள் யதார்த்தமான சேர்த்தல் ஆகியவை நடக்கிறது. 17-ந்தேதி இரவு 7 மணிக்கு பிச்சாடனார் புறப்பாடு திருவீதி உலா, 18-ந்தேதி மாலை 6 மணிக்கு சண்டிகேஸ்வர் திருவீதி உலா நடக்கிறது. 19-ந்தேதி காலை 11 மணிக்கு பஞ்சமூர்த்திக்கு பிராய்ச்சித்த அபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Next Story