ஸ்ரீபெரும்புதூர் தி.மு.க. கவுன்சிலருக்கு சரமாரி கத்தி குத்து - 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
ஸ்ரீபெரும்புதூர் தி.மு.க. கவுன்சிலரை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு பகுதியை சேர்ந்தவர் வீரா (வயது 32). இவர் சமீபத்தில் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியின் 11-வார்டு கவுன்சிலராக சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீரா தனது குழந்தைகளுடன் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள சூப்பர் மார்க்கெட் கடைக்கு காரில் வந்தார். குழந்தைகள் காரில் இருந்தன. வீரா கடையில் பொருட்களை வாங்கி கொண்டு காரில் ஏறும் போது கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 6 மர்ம நபர்கள் கத்தியால் சரமாரியாக வீராவை தலை, கை, மார்பு ஆகிய பகுதியில் குத்திவிட்டு தப்பி ஓடினர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய வீராவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வீராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story