மின்வெட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்


மின்வெட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 30 April 2022 1:44 PM GMT (Updated: 30 April 2022 1:44 PM GMT)

தச்சம்பட்டு பகுதியில் மின்வெட்டை கண்டித்து 17 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாணாபுரம்

தச்சம்பட்டு பகுதியில் மின்வெட்டை கண்டித்து 17 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மின்மாற்றி பழுது

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு துணை மின் நிலையத்தை மையமாகக் கொண்டு 17 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு இங்குள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 20 நாட்களுக்கு முன்பு அங்குள்ள மின்மாற்றி பழுதான நிலையில் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் சரியான முறையில் மின்சாரம் கிடைக்கவில்லை, எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துணை மின் நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை, எனத் தெரிகிறது. 

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் தச்சம்பட்டு துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தப் பதிலும் அளிக்காததால் விவசாயிகளும், பொதுமக்களும் தச்சம்பட்டு பகுதியில் திருவண்ணாமலை-மணலூர்பேட்டை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், நிலங்களில் பயிரிட்டுள்ள அனைத்து விவசாய பயிர்களும் மின்சாரம் இல்லாத காரணத்தால் தண்ணீரின்றி காய்ந்து வருகிறது. அரை மணி நேரம், ஒரு மணிநேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. அப்படியே வந்தாலும் திடீர் திடீரென மின்சாரம் நிறுத்தப்படுகிறது. 

மின்சாரம் எந்த நேரம் வருகிறது. எப்போ போகிறது எனத் தெரியவில்லை. மின்தடையால் மின்மோட்டார்கள் பழுதடைகிறது. சீராக மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும், என்றனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும்  தச்சம்பட்டு போலீசார், மின் வாரியத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள், தினமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. பழுதான மின்மாற்றியை உடனடியாக சீரமைத்து தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கோரிக்கை வைத்தனர்.

அதன் பிறகு சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். சாலை மறியலால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

Next Story