கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை - திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு


கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை - திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 April 2022 7:14 PM IST (Updated: 30 April 2022 7:14 PM IST)
t-max-icont-min-icon

கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

திருத்தணி, 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட கரிம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தர்மமந்தடி (வயது 70). விவசாயி. இவருக்கும் இவரது வீட்டுக்கு எதிரே வசிக்கும் தியாகராஜன் ( 34) என்பவருக்கும் இடையே வீட்டு மனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு தியாகராஜனுக்கும் தர்மமந்தடி குடும்பத்தினருக்கும் நிலம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. அப்போது தியாகராஜன் வீட்டில் வைத்திருந்த இரும்பு கம்பியால் தர்மமந்தடியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

இதில் ரத்தவெள்ளத்தில் மயங்கி தர்மமந்தடி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்த உறவினர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 20 நாட்களுக்கு பிறகு அவர் சுயநினைவுக்கு திரும்பினார்.

இதுகுறித்து தர்மமந்தடியின் மனைவி லட்சுமி (65) பள்ளிப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் தியாகராஜனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக திருத்தணி சார்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் வாதங்கள் முடிவுற்ற நிலையில் சார்பு நீதிபதி காயத்திரி தேவி முதியவரை இரும்பு கம்பியால் தாக்கிய வழக்கில் தியாகராஜனுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். அரசு சார்பில் அரசு வக்கீல் லட்சுமணன் ஆஜராகி வாதாடினார்.

Next Story