தேனி அருகே ரேஷன் கடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு


தேனி அருகே ரேஷன் கடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 30 April 2022 7:16 PM IST (Updated: 30 April 2022 7:16 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே ரேஷன் கடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு செய்தார்.

தேனி:
தேனி அன்னஞ்சி விலக்கு அருகில், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து இன்று காலை புறப்பட்டு தேனிக்கு வந்தார். வரும் வழியில் அரப்படித்தேவன்பட்டியில் அவர் தனது காரை நிறுத்தச் சொன்னார். பின்னர் காரில் இருந்து இறங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த ஊரில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றார். முதல்-அமைச்சர் வருவதை பார்த்தவுடன், ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க காத்திருந்த மக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். 
முதல்-அமைச்சரை நோக்கி கையசைத்த மக்களுக்கு வணக்கம் கூறியபடி, ரேஷன் கடைக்குள் அவர் சென்றார். அங்கு பொருட்கள் இருப்பு விவரங்களை பார்வையிட்டார். பொருட்கள் தரமாக உள்ளதா? என ஆய்வு செய்தார். பின்னர் பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்களிடம் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? பொருட்கள் தரமானதாக இருக்கிறதா? என கேட்டறிந்தார். மேலும், மக்களிடம் குறைகளையும் அவர் கேட்டறிந்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு தேனிக்கு வந்து அரசு விழாவில் பங்கேற்றார். இந்த ஆய்வின் போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story