விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை மின் ஊழியர்கள் முற்றுகை


விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை மின் ஊழியர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 30 April 2022 2:08 PM GMT (Updated: 30 April 2022 2:08 PM GMT)

மின்கம்பியாளரை தாக்கிய தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை மின் ஊழியர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம், 

விருத்தாசலம் மணலூரை சேர்ந்தவர் அரசன் மகன் செல்வகுமார்(வயது 45). இவர் விருத்தாசலம் மின்சார வாரிய அலுவலகத்தில் மின்கம்பியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 28-ந் தேதி இரவு 10 மணிக்கு ஆயியார் மடத்தெருவில் உள்ள மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து கொண்டிருந்தார். 
அப்போது அங்கு வந்த தி.மு.க. பிரமுகரும், அவருடன் வந்தவரும்  செல்வக்குமாரை ஆபாசமாக திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து  உதவி பொறியாளர் பழனிவேல், விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கவில்லை. 

இந்த நிலையில் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை செயற்பொறியாளர் சுகன்யா தலைமையிலான ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தி.மு.க. பிரமுகருக்கு ஆதரவாக செயல்படும் போலீசாரை கண்டித்தும், புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷமிட்டனர். 
இதனை தொடர்ந்து அனைவரும் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயினை சந்தித்து புகார் கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட அவர், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து மின் ஊழியர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story