தேனி மாவட்ட வளர்ச்சிக்கு கருணாநிதி நிறைவேற்றிய திட்டங்களை நினைவுகூர்ந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தேனி மாவட்ட வளர்ச்சிக்கு கருணாநிதி நிறைவேற்றிய திட்டங்களை நினைவுகூர்ந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 30 April 2022 2:53 PM GMT (Updated: 2022-04-30T20:23:16+05:30)

தேனி மாவட்ட வளர்ச்சிக்கு கருணாநிதி நிறைவேற்றிய திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.

தேனி:

பெருமையாக கருதுகிறேன்

தேனியில் நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது தேனி மாவட்டத்தில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை எடுத்துக்கூறி, புதிய திட்டங்களை அறிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தேனி மாவட்டம் ஒரு தலை சிறந்த மாவட்டம். அணை என்றால் மாபெரும் அணையான வைகை அணை, மலை என்றால் மேகமலை, வெள்ளிமலை, போடி மெட்டு, அருவிகள் என்றால் கும்பக்கரை அருவி, சுருளி அருவி, கலை என்றால் கண்ணகி கோவில். இப்படிப்பட்ட வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் பெருமைக்குரிய மாவட்டமான தேனி மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசும் போது, தேனி மாவட்டம் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட மாவட்டம் என்பதை நினைவு படுத்தினார். ஆம், 1996-ம் ஆண்டு இந்த மாவட்டத்தை கருணாநிதி உருவாக்கி தந்தார். 1-1-1997 முதல் தேனி மாவட்டம் செயல்பட தொடங்கி இருக்கிறது. 1989-ம் ஆண்டு பெரியகுளம் அருகே அரசு தோட்டக்கலை கல்லூரியை அன்றைக்கு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி தான் தொடங்கி வைத்தார். 2001-ம் ஆண்டு புதிதாக கட்டப்பட்ட தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை கருணாநிதி தான் திறந்து வைத்தார். தேனியில் 1999-ம் ஆண்டு அமைக்கப்பட்ட உழவர் சந்தையை கருணாநிதி தான் தொடங்கி வைத்தார். பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை ரூ.32 கோடி மதிப்பீட்டில் 50 கிராமங்கள் பயன்பெறும் வகையில் 2001-ம் ஆண்டு கருணாநிதியால் கட்டி முடிக்கப்பட்டது.

நூற்றாண்டு கனவு திட்டம்

உத்தமபாளையம், தேவாரம் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பி.டி.ஆர். கால்வாய் திட்டம் மற்றும் 18-ம் கால்வாய் திட்டத்தை கருணாநிதி தொடங்கி வைத்தார். தேனி மாவட்ட மக்களின் நூற்றாண்டு கனவு திட்டம் தான் 18-ம் கால்வாய் திட்டம். 1999-ம் ஆண்டு ரூ.22.50 கோடி செலவில் கருணாநிதியால் தொடங்கப்பட்டு, 2008-ம் ஆண்டு நிறைவு பெற்று இன்றைக்கு மக்களுக்கு பயன்படும் வகையில் அமைந்து இருக்கிறது. தேனியில் உள்ள புதிய பஸ் நிலையத்துக்கு கடந்த 2010-ம் ஆண்டு இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அன்றைக்கு துணை முதல்-அமைச்சராக இருந்த நான் வந்து அடிக்கல் நாட்டினேன் என்பதையும் மறந்து விடவில்லை.
திராட்சை அதிகம் விளையும் சின்னமனூர் அருகே ஒத்தப்பட்டி பகுதியில் தனியார் திராட்சை தொழிற்சாலையை அன்றைக்கு நான் தொடங்கி வைத்தேன். இப்படி, ஏராளமான திட்டங்கள், எண்ண முடியாத சாதனைகளை செய்த ஆட்சி தான் தி.மு.க. ஆட்சி என்பதை பெருமையோடு எடுத்து கூறுகிறேன்.

நவீன அரிசி ஆலை

இவ்வளவு நேரம் செய்த சாதனைகளை சொன்னேன். இப்போது என்ன செய்யப் போகிறோம் என்று சொல்லப் போகிறேன். பெரியகுளம் அரசு மருத்துவமனை ரூ.8 கோடி செலவிலும், உத்தமபாளையம் அரசு மருத்துவமனை ரூ.4 கோடி செலவிலும் மேம்படுத்தப்படும். போடி தாலுகா மஞ்சநாயக்கன்பட்டி அருகே கொட்டக்குடி ஆற்றில் ரூ.3 கோடி மதிப்பில் தடுப்பணை அமைக்கப்படும். ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை உயர்தொழில்நுட்ப விசைத்தறி பூங்காவை தொடர்ந்து சிறப்பாக செயல்பட செய்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டு அதுவும் செயல்படுத்தப்படும். தேனி மாவட்டத்தில் அதிக அளவில் நெல் உற்பத்தியாவதை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு உதவக்கூடிய வகையில் நவீன அரிசி ஆலை உருவாக்கப்படும்.
வடவீரநாயக்கன்பட்டியில் உள்ள குறவர்கள் காலனி திட்ட பகுதியில் நரிக்குறவர் மற்றும் குறவர்களுக்காக குடியிருப்பு கட்டப்படும். 175 குடியிருப்புகளுக்கான பங்களிப்பு தொகை ரூ.3.5 கோடியை முதற்கட்டமாக அரசு அளித்துள்ளது. பின்பு எளிதான சிறு தவணைகளில் அவர்கள் திருப்பி செலுத்த வழிவகை செய்யப்படும். அதிக அளவில் பயணிகள் வந்து செல்லும் குமுளி பஸ் நிலையம் ரூ.7.5 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.


Next Story