மனுநீதி நாள் முகாமில் 340 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி


மனுநீதி நாள் முகாமில் 340 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
x
தினத்தந்தி 30 April 2022 9:59 PM IST (Updated: 30 April 2022 9:59 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீமுஷ்ணம் அருகே மனுநீதி நாள் முகாமில் 340 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.

கடலூர், 

ஸ்ரீமுஷ்ணம் தாலுகா வலசக்காடு கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 340 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்து 61 ஆயிரத்து 944 மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை, வீட்டுமனை பட்டாவிற்கான ஆணை, சலவை பெட்டிகள், தையல் எந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பஸ் இயக்கம்

பின்னர் அப்பகுதி மக்கள் புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடனடியாக விருத்தாசலத்தில் இருந்து ராஜேந்திரபட்டினம், ஸ்ரீமுஷ்ணம், கானூர், வலசக்காடு, குறிஞ்சிக்குடி வரை செல்லும் பஸ்சை மக்கள் பயன்பாட்டுக்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு அமைச்சர், உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். முகாமில் கூடுதல் கலெக்டர் ரஞ்ஜீத்சிங், சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ., சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்க.ஆனந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story